|
|
விறலி வாயில் மறுத்தல்: |
| வண்புன லூர்வையை சூழ்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போல் கண்புன லூருமென் காதல்கண் டேநின் கடைத்தலைக்கே தண்புன லூரன்வந் தானென்று சாற்றனை தானமுறப் பண்புன லூர்களெல் லாம்பாடி யேற்றுண்ணும் பாண்மகளே. |
(இ-ள்.) ஈவுபெறப்புனால்சூழ்ந்த ஊர்கடோறும் பண்ணைப் பாடி இரந்துண்ணும் பாண்மகளே! வளவிய புனல் செல்லும் வையையாறு சூழ்ந்த தஞ்சைவாணனை வாழ்த்தலர்போல் கண்ணிடத்துப் புனலூர்ந்துவரும் என் காதலைக்கண்டு நின்கடைத் தலைவியன்கண் தண்ணிய புனலூரன் வந்தனனென்று சொல்லினை, இச்சொற்கு மனம் பொறுத்தேன் சொல்லாய் என்றவாறு. |
ஊர்தல் - செல்லுதல். உர்தல் - பெருகுதல். ஊரன் - மருதநிலத்துத் தலைவன். தானம் - ஈவு. |
`இச்சொற்கு மனம் பொறத்தேன் சொல்லாய்` என்றது வருவிக்கப்பட்டது. |
(395) |
விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல்: |
| புரவே யெதிர்ந்த நமக்கு விருந்தின்று போலவென்றும் வரவே புணர்ந்தநம் மாதவம் வாழிய வாணன்தஞ்சைக் குரவேய் கருமுகிற் கொந்தள பாரங் குரும்பைக்கொங்கை அரவேய் நுடங்கிடை யாள்விழி யூர்சிவப் பாற்றுதற்கே. |
(இ-ள்.) வாணன் தஞ்சையிலிருக்கும் குரவலர் மாலை சூடிய கருமுகில் போன்ற அளகபாரத்தையும், குரும்பை போன்ற கொங்கைப் பாரத்தையும் தாங்க ஆற்றாதாள் போல, பாம்பையொத்த ஒசியப்பட்ட இடையாளது விழியின்கண் ஊரப் பட்ட சிவப்பாற்றுதற்குத் தம்மைக் காக்க எதிராய்வந்த விருந்து இன்று வரப்புணர்ந்த நமது மாதவம் எஞ்ஞான்றும் வாழ்க என்றவாறு. |
புரக்க - காக்க. `நமக்கு` என்புழி, வேற்றுமை மயக்கம். போல : அசைநிலை. |
| 1`ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்` |
என்பதனானுணர்க. குரவு : ஆகுபெயர். கொந்தளபாரம் - அளகபாரம். நுடங்கல் - ஒசிதல். `மாதவம்` என்றும் வாழிய` என இயையும். |
(396) |
|
1. தொல். சொல். இடையியல் - 30. |