கட
305
மீட்சி

 
மங்கை - அம்பிகை. தாவாத - நீங்காத.  இதழி - கொன்றை.   உம்மை - சிறப்பு.
(401)    
தலைமகள் புலவி தணியாளாகத் தலைமகனூடல்:
  தழங்கார் புனல்வையை சூழ்தஞ்சை வாணன் தனதருள்போல்
பழங்காத லெண்ணலென் பைதனெஞ் சேயிவள் பண்டுபைம்பொற்
கழங்கா டிடமுங் கடிமலர்க் காவுங் கடந்துபுள்ளும்
வழங்கா வழிநமக் கோர்துணை யாய்வந்த மானல்லளே.
(இ-ள்.) துன்பமுற்ற   என்னெஞ்சே!   இவள்   முன்பு   செம்பொன்னாற் செய்த
கழங்காடப்பட்ட இடமும், விளையாடப்பட்ட மனத்தொடு கூடிய மலர்ச்சோலையும்
விட்டு   நீங்கிப் புட்களும்  இயங்காத   பாலைநிலத்தின்  வழியில்   நமக்கொரு
துணையாய்வந்த  மான்போன்றவளல்லள்,  நிறைந்து  ஒலிக்கும்   புனலையுடைய
வையையாறு  சூழ்ந்த   தஞ்சைவாணன்  தன்னுடைய  அருள்போன்ற   தலைவி
பழங்காதலை எண்ணவேண்டா என்றவாறு.

`ஆர்தயங்கு புனல்` என இயையும்.  தழங்கு புனல்: வினைத் தொகை.   பைதல் -
துன்பம். கடி - மணம்.  கா - சோலை.   கடத்தல் - விட்டு நீங்கல்.   வழங்கல் -
உலாவல். மான்: ஆகுபெயர்.
(402)    
பாங்கி அன்பிலை கொடியையெனத்
தலைவனை இகழ்தல்:
பாங்கி  அன்பிலை  கொடியை  எனத்  தலைவனை  இகழ்தல்  என்பது,  பாங்கி
தலைவனை அன்பிலாய் கொடியாய் என இகழ்ந்து கூறல்.
  மைந்நாண் மலர்த்தொடை வாணன்தென் மாறையெம் மன்னவுவந்
தந்நாண் முயங்கி அமிழ்தென வார்ந்தளிர் ஆர்வமுற்ற
முந்நாண் மதிவட்ட மென்முலை மாதை முனிந்துநஞ்சென்
றிந்நாண் மிகவுவர்த் தீர்புல வாநிற்றிர் எங்களையே.
(இ-ள்.) கருநிறம்    பொருந்திய  முறுக்கவிழ்  மலர்   மாலையணிந்த   வாணன்
தென்மாறை  நாட்டிலிருக்கும் எமக்கு மன்னரே! அந்நாள் மூன்றாம்  பூரணைநாள்
மதியினது   வட்டம்   போன்ற   மெல்லிய   முலைவட்டத்தையுடைய   மாதை
விருப்பமுற்றுப்  புணர்ந்து மகிழ்ந்து அமுதென  இன்பத்தை  நுகர்ந்தீர்; இந்நாள்,
நஞ்சென்று முனிந்து, மிகவும் வெறுத்து எங்களோடு புலவாநின்றீர் என்றவாறு.
மைந்நாண்மலர் - குவளைமலர்.    மன்ன: அண்மைவிளி.   உவந்து - மகிழ்ந்து.
முயங்கி - புணர்ந்து. ஆர்தல் - நுகர்தல். ஆர்வம் - விருப்பம்.