1நந்தை பத்திரை, சயை, இருத்தை, பூரணை என முதற்றிதி தொடுத்துப் பஞ்சமிவரைக்கும் முதலாம் வட்டம், சட்டி தொடுத்துத் தசமிவரைக்கும் இரண்டாம் வட்டம், ஏகாதசி தொடுத்துப் பூரணைவரைக்கும் மூன்றாம் வட்டமாதலின், `முந்நாண் மதிவட்டம்` என்றார். உவர்த்தல் - வெறுத்தல். புலத்தல் - ஊடுதல். எங்களை என்புழி, வேற்றுமை மயக்கம். `அந்நாள் முந்நாள்` எனவும், `ஆர்வமுற்று முயங்கியுவந்தமிழ்ந்து` எனவும், `இந்நாணஞ் சென்று முனிந்து மிக` எனவும், `எங்களைப் புலவா நிற்றிர்` எனவும் இயையும்.
(403)
ஆயிழை மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாக வரவெதிர் கோடல்:
ஆயிழை மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாக வரவு எதிர்கோடல் என்பது, தலைவன் பரத்தையர் சேரிக்குத் தேரின் மேலேறிப் போம்போது தெரிந்தெடுத்த அணியை யணிந்த புதல்வன் குறுக்காக நிற்க. அப்புதல்வனைத் தழுவி யெடுத்துக் கொண்ட தலைவன் ஆற்றாமையுடன் வந்துழி, தலைவி புதல்வனும் தலைவனாற்றாமையும் தூதாகத் தலைவனை எதிர்கொள்ளுதல்.