|
பொய் பாராட்டல் என்பது, தலைமகன் தலைமகள் மாட்டு உள்ளதும்் இல்லதும் கூட்டிக் கொண்டாடுதல். |
ஆயின், இக்கிளவியிற் பொய்பாராட்டல் எனக் கூறியதல்லது, உள்ளதும் எனக் கூறியதில்லையால் இவ்வாறு உரை கூறியதென்னையெனின், இல்லதனைக் கூறிக்கொண்டாடுவான் உள்ளதனை விடுவதிலன், மிகவுங் கொண்டாடுவான் என்பதாதலான், பொய் பாராட்டற்கு உள்ளதும் இல்லதுங்கூட்டிக் கொண்டாடுதல் என 1`மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல்` என்னுஞ் சூத்திரத்தில் உரையாசிரியர் எழுதியவுரையிற் கண்டுகொள்க. |
| பருந்தொன்று கூரிலை வேற்படை வாணன் பரிமளப்பூஞ் செருத்தொன்று சோலைத்தென் மாறைஅன் னீர்செழுந் திங்களுங்கள் முருந்தொன்று கோபமுகங்கண்டு நாணி முயல்மறுத்தீர் மருந்தொன்று நாடியன் றோவட மேரு வலங்கொள்வதே.
|
(இ-ள்.) பகைவ ருடலில் தோய்ந்து அவர் ஊன் பற்றிப் புலவு நாறுதலால் ்பருந்து பொருந்துங் கூரிய இலை போலும் வேலாகிய படையையுடைய வாணனது பரிமளம் பொருந்திய பூவோடு கூடிய செருந்திமரஞ் செறிந்த சோலை சூழ்ந்த தென்மாறை நாடுபோலும் வனப்புடையவரே, நிறைந்த திங்கள் உமது முருந்து பொருந்துங் கோபமுடைய முகத்தைக் கண்டு, தன்னிடத்து முயலாகிய மறு உண்மையான் ஒவ்வாமையாய் நாணி, அம் முயல்மறுத்தீர்தற்கு மருந்தொன்று மனத்தில் நாடி யன்றோ வடமேருவைத் தினம் வலங்கொள்வது என்றவாறு.
|
முருந்து - இறகின்முதன்முள்; பற்கு உவமை. கோபம் - இந்திரகோபம்; இதழ்க்கு உவமை. இஃதிரண்டும் ஆகுபெயர். இதனுள் இல்லது மருந்தொன்று நாடுதல்; உள்ளது வடமேரு வலங்கொள்வது. மகளிர்க்கு உறுப்புப் பலவற்றிலும் முகனும் முலையும் சிறந்த உறுப்பாதலின், இவ்விரண்டினொன்றை இக்கிளவிக்குப் பாடவேண்டும் என்பது புலவர் வழக்கு, `சிறப்புடைப் பொருளைத் தானெடுத்து மொழிதல்` என்னுந் தந்திர உத்தியாதலான். |
(9) |
இடம்பெற்றுத் தழால்: |
இடம்பெற்றுத் தழால் என்பது, தலைவி நிற்குமிடத்து அயலாய்த் தேனருவி யாற்றங்கரையில் அசோகமரம் நிற்க, பூங்கொடி சுற்றும்
|
|
1. தொல் - பொருள். களவியல் - 11. |