|
பெறப்பட்டது. நிறை - மறைபிறரறியாமை. 1`நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை` என்றார் பிறரும். அன்றியும்,
|
| 2`காமக்கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு`
|
என்று கூறியவாற்றானும் உணர்க. |
(14) |
வறிதுநகை தோற்றல்: |
வறிதுநகைதோற்றல் என்பது, தலைவி முகத்தே சிறுநகை தோற்றல். என்னை? 3`வறிதுசறிதாகும்` என்னுஞ் சூத்திரத்தான் உணர்க. நகை தோற்றல் - நகை வெளியாய்த் தோன்றியதென்னின் பொருந்தாது. என்னை, தலைவன் முன் நாணுடையளாதலின் பல்தோன்றச் சிறுமுறுவல் தோன்றலும் அமையாது. அமையாதாயின், வறிது நகைதோற்றல் என்னுங் கிளவிப் பொருள் பொய்க்குமேயெனின், அற்றன்று;
|
| 4`முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு`
|
என்பதனான் நகை வெளித்தோன்றாதென்பது கூறியவாறு உணர்க. நகைதான் தோன்றுமாறென்னை யெனின், தலைவன் சொற்கு வேட்கையாலுடன்பட்டு மகிழ்ச்சியான் முகமலர்ந்து அம்மலர்ச்சிக் குறிப்பினான் நகையெனத் தோற்றுவித்தவாறு உணர்க.
|
| எறிதேன் அலம்புஞ் சிலம்பினெப் போதும் இரந்திவள் பின் வெறிதே திரிந்துமெலிந்தன நாமுள்ள மெல்லியற்குப் பிறிதோகொ லென்னும்பெருந்தகை தேறப் பெரிதுயிர்த்து வறிதே முறுவல்செய் தாள்தஞ்சை வாணன் வரையணங்கே.
|
(இ-ள்.) இறகாற் காற்றை யெறியும் வண்டுகள் எப்போதும் ஆரவாரிக்குங் சிலம்பிடத்தில் குறையிரந்து இவன் பின்னே பயனின்றியே திரிதலைச் செய்து நாம் மெலிந்தனம்; இம்மெல்லியற்கு உள்ளம் வேறென்று சொல்லும் பெருந்தகை தேறுமாறு பெரியதாய் நெட்டுயிர்ப்பெறிந்து தஞ்சைவாணன் வரையணங்கு போல்வான் வறிதே முறுவல் செய்தாள் என்றவாறு.
|
`எறிதேன்` என்பது ஒற்றுமை நயத்தால் சினைவினை முதன்மேல் நின்றது. அலம்பல் - ஆரவாரித்தல். `எப்போதும்` என்பதனை |
|
1. கலித். நெய்தல் - 16. |
2. குறள். நிறையழிதல் - 1. |
3. தொல். சொல். உரியியல் - 40. |
4. குறள். குறிப்பறிவுறுத்தல் - 4. |