|
என்பதனை வண்டுகளோடு கூட்டுக. பெரிதுயிர்த்தல் எற்றுக்கோ வெனின், நிறையால் தடுக்கரிதாயிற்றென்னும் எண்ணத்தினால் நெட்டுயிர்ப்புத் தோன்றிற்றெனக் கொள்க.
|
இக்கவி யார்கூற்றெனின், உரைப்போரும் கேட்போரும் இன்மையான் கவிக்கூற்றென்று கொள்க. அகப்பாட்டுறுப்புப் பன்னிரண்டினும் துறை யென்னும் உறுப்பு இக்கவியெனக் கொள்க. தலைவன் கூற்றாய்க் கூறாது கவிக்கூற்றாய்க் கூறி வேண்டுவ தென்னை யெனின், இது தலைவன் கூற்றாயின், மேல்முறுவற்குறிப்பு உணர்தல் என்னும் தலைவன் கூற்றுத் தோன்றாதாதலான் இது கவிக்கூற்றாயிற்று.
|
(15) |
முறுவற் குறிப்புணர்தல்: |
முறுவற் குறிப்புணர்தல் என்பது, அம்முறுவலின் குறிப்பைத் தலைமகள் உணர்தல்.
|
| வின்மலை வேலன்ன நன்னுதல்வாட்கண்ணி வேட்கையெண்ணாள் என்மலை வேனென்னு மென்னுயிர் தாங்கு மெதிர்ந்த வொன்னார் மன்மலை வேழந் திரைகொண்டசேய்தஞ்சைவாணன் மஞ்சார் தென்மலை வேய்திக ரும்பெருந்தோளி சிறுநகையே.
|
(இ-ள்.) போரிலெதிர்ந்த பகைவரது நிலைபெற்ற மலைபோன்ற யானையைத் திறையாகக் கொண்ட, முருக வேளை யொக்குந் தஞ்சைவாணனது முகிலார்ந்த பொதிய மலையிலெழுந்த வேயை நிகரும் பெரிய தோளினையுடையாளது சிறிய நகையானது, `வில்லும் பொருகின்ற வேலும் போன்ற நன்னுதலும் வாட்கண்ணுமுடையாள் எனது வேட்கையினை யெண்ணாளாயின், நான்இனி யாது செய்வேன்` என்னும் என்னுயிரைத் தாங்கா நிற்கும் என்றவாறு,
|
`வின்மலை வேல்` என்புழியும், `நன்னுதல் வாட்கண்ணி என்புழியும் எம்மைத் தொகைநிரனிறை. மலைவேள் - பொருவேள் எம் மலைவேன் - யாது செய்வேன். மலைவேழம் :உவமத் தொகை.என்னுயிர் தாங்கா நிற்கும் என்பதனால், தலைவி வேட்கைக் குறிப்பை முறுவலினான் உணர்ந்தானென்று கொள்க. கைக்கிளையில், `குறிப்பறிதல்` என்பது தன் அவாவினாற் கூறியதல்லது வேட்கைக் குறிப்பு நிகழ்ந்ததன் றென்பது இக்கிளவியாற் றெளியப்பட்ட தென்று உணர்க.
|
(16) |
|
முயங்குதலுறுத்தல்: |
முயங்குதலுறுத்தல் என்பது, தலைவி முயங்குதற்கு உடன்பட்ட அருமையை வலியுறுத்திக் கூறுதல். |