|
மணியும் பெறவேண்டுமென்று சிந்தித்தலை முயன்றாற் பெறலாம் என்றவாறு.
|
தவஞ்செய்து முயன்றோர்க்கும் எய்துதற்கு அரிதாகிய இவளை நம் முயற்சியாற் பெற்றமையான், நாகமணியும் பெறலாமென்று தன் முயற்சியின் பெருமை கூறினானென்க. என்னை?
|
| 1`ஊழையும் உப்பக்கங் காண்பர்உலைவின்றித் தாழ துஞற்று பவர்.` |
இக்குறளில், ஊழில் ஒருவற்குப் பேறில்லாவிடினும், முயற்சி ஊழைப் புறங்கண்டு நிறைத்தது முடிக்கும் எனக் கூறினாராகலின் என்க, இவண் முயற்சி யாதெனின்,
|
| 2`காட்சி முதலாச் சாக்கா டீறாக் காட்டிய பத்துங் கைவரு மெனினே மெய்யுறு புணர்ச்சி எய்துதற் குரித்தே` |
என்னுஞ் சூத்திரவிதியால், இப் பத்து அவத்தைக் கண்ணும் மடியின்றி முயன்று செய்தல் எனக் கொள்க.
|
ஆயின், சாக்காடு என்பது என்னையெனின், உணர்விலனாதல். மலைநாடு - சேரமானாடு. வழுதி - பாண்டியன். எண்ணெண்கலை - கல்வி. மால் - பெருமை. வரை - மலை. பொன்னாண் - பொன்னினாற் செய்த நாண். முயன்று - முயற்சிப்பட்டு. முயங்கினம் - புணர்ந்தனம். இனி - இன்று. |
(18) |
|
புகழ்தல்: |
புகழ்தல் என்பது, தலைவியது நலத்தைப் பாராட்டல்.
|
| திரண்மா மரகதச் செய்குன்று காளென்றுஞ் செவ்வனநீர் முரண்மா தவங்கள் முயன்றுசெய் தாலு முளரிமங்கை சரண்மாறை வாணன் தமிழ்த்தஞ்சை நாட்டென் தனியுயிர்க்கோர் அரண்மா னனையகண் ணாள்கொங்கை போறல் அரிதுமக்கே.
|
(இ-ள்.) திரண்ட பெரிய மரகதத்தாற் செய்த செய்குன்றுகாள், நீர் செவ்விய வனத்தின்கண்ணிருந்து இரவு பகல் எப்பொழுதும் முலைக்கு நிகராக வேண்டுமென்று மாறுபட்ட பெருந்தவத்தை முயன்று செய்கின்றீர்; செய்யினும், திருமக. ளடைக்கலமாக விருக்கும் மாறையென்னும் வாணனது தமிழ்த் தஞ்சை நாட்டகத்து துணையில்லாத எனது உயிர்க்கு அரணும் மானும் அனைய கண்ணாள் கொங்கையை யொப்பாதல் உமக்கு அரிது என்றவாறு.
|
செய்குன்று: வினைத்தொகை; செய்குன்றாவது - மாதர் விளையாடுவதற்கு மரகதமணியாற் செய்யும் மேடை. செவ்வனம் என்புழி ஏழாம் வேற்றுமைத் தொகை. முரண் - மாறுபாடு; மாறுபாடாவன - மழையில் நனைந்தும், வெயிலில் உலர்ந்தும், பனியில் குளிர்ந்தும், காற்றில் அலைபட்டும் நிலையிற் பிரியாதிருத்தல். மா - பெருமை. முயன்று - வருந்தி. முளரி மங்கை - திருமகள். சரண் - அடைக்கலம். தனி - துணையின்மை. அரண் மான் என்புழி உம்மைத் தொகை; மதன்போர்க்கு அரணாயிருத்தலின் அரண் என்று கூறியது. போல்தல் - போறல்.
|
|
1. குறள், ஆள்விளை - 10. |
2. அகப்பொருள் விளக்கம், அகத்திணை 36 |