வன்புறை
55

 
     இடமணித் தென்றல்:

இடமணித்தென்றல் என்பது,தலைவனூர் சேய்த்தோ அணித்தோ என்று  தலைமகள்
கவலைப்பட்டவதனைக் குறிப்பினாலறிந்த தலைவன், இடம் அணித்தென்று கூறுதல்.

 மணிபொன் சொரியுங்கை வாணன்தென் மாறை மருவினர்போல்
தணிபொன் சொரியுந் தடமுலை யாயுயர் சந்தமுந்தி
அணிபொன் சொரியு மருவியெஞ் சார லகத்தலர்தேங்
கணிபொன் சொரியுநின் சாரல்மென் காந்தளங் கையகத்தே.

(இ-ள்.) ஏற்றாற்கு  மணியும் பொன்னுஞ் சொரியப்பட்ட கையையுடைய  வாணனது
தென்மாறை  நாட்டின்  கண்  உறைவார்போல, தணிவாகப்  பொன்போற்  பசலை
நிறத்தைச்  சொரியும்  பெரிய  முலையாய், நீ  இங்ஙனம்  ஆற்றாமை   கொள்ள
வேண்டா; நின்னூர்க்கு எம்மூர் சேய்த்தன்று, அணித்தாயிருக்கும்; எங்ஙனமெனின்,
உயர்ந்த  சந்தனத்  தருக்களைத் திரையா லெறிந்து அணியணியாகப்  பொன்னைச்
சொரியும்  அருவி  பொருந்திய  எம்  சாரலகத்துத்  தேனொடு   கூடிய வேங்கை
நின்சாரலிடத்திருக்கும்   மெல்லிய   காந்தட்போதாகிய   கையிடத்திலே  பொன்
போல் அலரைச் சொரியும் என்றவாறு.

`சந்த முந்தி அணிபொன் சொரியும் அருவி` என்றதனால் திரை வருவிக்கப்பட்டது.
`மணி பொன்` என்புழி உம்மைத் தொகை. தணிதல் - நிறைதல். உந்தல் - எறிதல்.
`பொன்போல் அலரைச் சொரியும்` என  மொழிமாற்றிக் கொள்க. ஆதலான்,  என்
சாரலும் நின் சாரலும்  அணித்தென்றவாறாயிற்று. என் சாரல் வேங்கைத்  தருவால்
நின்சாரற்    காந்தள்   பயன்பெற்றாற்   போல,   என்னால்   நீயும்   நீங்காது
பயன்பெறுவையென    உள்ளுறையுவமம்   தோன்றியவாறு   உணர்க.  இவ்வாறு
இடமணித்தென்று   கூறித்  தலைவன்  நீங்கும்.  எவ்விடத்து  நீங்குமோ எனின்,
தலைவி  ஆற்றுவாள்   கொல்லோ, ஆற்றாள் கொல்லோ என்பது  அறிதுமென்று,
தலைவி  காணாததோர் அணிமைக்கண் தான் மறைந்திருந்து தலைவியை  நோக்கி
யிருக்குமெனக்  கொள்க. முன்னைய மூன்றும், `ஐயந்தீர்த்தல்,` பின்னைய மூன்றும்,
`பிரிவறிவுறுத்தல்` என்க.
(25)    
வன்புறை முற்றிற்று.