தஞ்சைவாணன் கோவை
70

 
எதிர்மறை. மற்று: அசை. `இது தகுமோ` என இயையும்.
(42)    
கிழவோன் கழற்றெதிர்மறுத்தல்:
      கிழவோன்   கழற்றெதிர்  மறுத்தல் என்பது, பாங்கன் கூறிய கட்டுரையைத்
தலைவன் மறுத்துக் கூறல்.

மாலாய் மதம்பொழி வாரண வாணன்தென் மாறையன்னார்
சேலார் கருங்கண்ணுஞ் செங்கனி வாயுஞ் சிறறியதுண்ணேர்
நூலார் மருங்கும் பெருந்தன பாரமு நும்மையன்றி
மேலா னவருங்கண் டாலுரை 1யாரிந்த வீரங்களே.

      (இ-ள்.) மயக்கமாய்  மதத்தைப் பொழியும்  வாரணத்தையுடைய வாணனது
தென்மாறைநாடு  போல்வாரது  சேல்  போன்ற கருங்கண்ணும்,  செங்கனிபோன்ற
வாயும்,  சிறுமையாகிய  நுண்ணிய  அழகாகிய  நூல்போன்ற  இடையும்,  பெரிய
தனபாரமும்,  கண்டார்  நெஞ்சினை  உருக்குந்  தன்மையில்  வலிய  என்பதனை
யெளியவாகக்  கூறினீர்;  நும்மையன்றி  மேலானவருங்  கண்டால்   உரையார்கள்
இத்தன்மையாகிய வீரமொழிகள் என்றவாறு.

      எனவே,   நீரும்   காணாத  தன்மையால்   இவ்வாறு கூறினீர்     என்று
கூறியவாறாயிற்று.     மால் - மயக்கம்.    வாரணம் - யானை.    சேல் - கயல்.
`செங்கனி வாய்`   என்புழி   உவமைத்தொகை.   ஏர் - அழகு.  `மேலானவரும்`
என்புழி   உம்மை   சிறப்பும்மை; ஏனைய எண்ணின் கண் வந்தன. ஆர் என்பது
ஒப்பு. பாங்கன் முன்னிலையெச்சம்.
(43)    
கிழவோற் பழித்தல்:
    கிழவோற் பழித்தல் என்பது, அவ்வாறு கூறிய தலைவனைப் பாங்கன்
பழித்துக் கூறல்.

 சூரார் சிலம்பிற் சிலம்பிமென் னூல்கொண்டு சுற்றவெற்றிப்
போரார் களிறு புலம்பிநைந் தாங்கொரு பூவைகொங்கை
வாரா லணைப்ப வருந்தினை நீதஞ்சை வாணன்வெற்பா
ஓராழி சூழுல கத்தெவ ரேநின்னை யொப்பவரே.

     (இ-ள்.)     தஞ்சைவாணன்     வெற்பிலிருப்பவனே!     சூர்பொருந்திய
மலையினிடத்துச்   சிலம்பியானது   மெல்லிய  நூலைக்கொண்டு  சுற்ற,  மாற்றார்
படையிலே  வெற்றிப் போர் செய்கின்ற யானையானது புலம்பி நைந்தாற் போலும்,
ஒரு   பெண்ணினது   வார்    பாருந்திய கொங்கையாலணைப்ப நீ  வருந்தினை;
ஆதலால், ஒப்பற்ற  ஆழி  சூழ்ந்த  வுலகத்தில்   நின்னை   யொப்பவார்  யார்
என்றவாறு.


1. (பாடம்) யாரின்ன.