|
|
சூர் - தெய்வப் பெண்களில் ஓர் சாதி, சிலம்பு - மலை. சிலம்பி - சிலந்தி. களிறு - யானை, ஆங்கு: உவமையுருபு. பூவை: ஆகுபெயர். `வார்க்கொங்கை` என மாறுக. ஆழி - கடல் `சிலம்பி மென்னூல் கொண்டு சுற்றவெற்றிப் போரார்களிறு புலம்பி நைந்தாங்கு` என்பது அந்நூற்றளையை நீங்கி வருதற்கு அரிதாய்ச் சங்கிலித் தளைக்கு நில்லாத தன் வலியிழந்து புலம்பி நைந்தாற் போல; கடல்போல் வருகின்ற நால்வகைப் படையும் வென்று மனத்திற் கலங்காத வீரம், ஒரு பெண்வேட்டையாற் கலங்கி வருந்தினை. நின்னை யொப்பாவார் யார்? எனக் குறிப்பாற் பழிப்புத் தோன்றியவாறு உணர்க.
|
(44) |
கிழவோன் வேட்கை தாங்கற் கருமை சாற்றல்: |
கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல் என்பது, தலைவன் நீ பழிக்கின்ற என்னுள்ளம் தேறுதற்கு வேட்கை என்னால் தாங்கமுடியாதென்று கூறுதல்.
|
| பொறைகொண்ட தாமரைப் போதன்ன கொங்கையும் பொங்கரிசேர் கறைகொண்ட வாளன்ன கண்களுங் கொண்டொரு கன்னிதெவ்வைத் திறைகொண்ட வாணன் செழுந்தஞ்சை சூழுஞ் சிலம்பிலின்றென் நிறைகொண்ட வாறறி யாதிக ழாரிற்றி நீயுநின்றே.
|
(இ-ள்.) பாரங்கொண்ட தாமரை முகையன்ன கொங்கையும், மிகுந்த அரிபொருந்திய, மாற்றாரைப் பொருது அவருடற் குருதிக்கறைகொண்ட வாளையொத்த கண்களுங்கொண்டு ஒரு கன்னியானவள், பகையைத் திறைகொண்ட வாணனது செழுமையாகிய தஞ்சை மாநகரைச் சூழும் சிலம்பிடத்து, இன்று என்னுடைய நிறையைக் கவர்ந்தவாறறியாது, நீயும் என் முன்னின்று இகழா நின்றாய், யான் என் செய்வேன்! என்றவாறு.
|
பொறை - பாரம். போது - முகை:
|
| 1`காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்`
|
என்பதனான் உணர்க.
|
பொங்குதல் - மிகுதல். அரி - செவ்வரி. கறை - இரத்தம். தெவ் - பகை. திறை - வெற்றி. நிறை என்பது அறிவு. நிறை. ஓர்ப்பு, கடைப்பிடி யென்னும் மேன்மக்கள் குணங்களுள் ஒரு குணம்; அஃதாவது,
|
|
1. குறள். பொழுதுகண் டிரங்கல் - 7. |