|
|
(இ-ள்.) நின்னாற் காணப்பட்ட முகத்தில் அம்பு போன்ற கண் இரண்டுடையார்க்கு இருப்பிடம், பெருமை பொருந்திய கடலகத்திற் பிறந்த தாமரையோ?பகைவர் தமக்கு மகநாளில் வந்த சனியையொக்கும் சந்திரவாணன் தென்மாறை வெற்போ? உழும் ஏர்ப்பெயலிற் பிணித்த நுகத்தின் நடுப்போன்ற தலைவனே!அவர்க்கு இலக்கணம் யாது? அறிய எனக்குச் சொல்வாயாக என்றவாறு. |
பகழி:ஆகுபெயர். மூரி - பெருமை. முந்நீர் - கடல். அரவிந்தம் - தாமரை. அடையார் - பகைவர். |
மகத்திற் சனிவருங்கால்உலகில் தீமை பயத்தலால், `அடையார் தமக்கு மகத்திற் சனியன்ன சந்திரவாணன்` எனக் கூறியது; |
| 1`மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்` |
என்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஓதியவாற்றானும் உணர்க. `நுகத்திற் பகலனையாய்` என்றது. நடுவன்றி ஓர்பக்கஞ் சாயின் அவ்விடத்திற் பாரமுறைக்கும், நடுவாகின் நாயிருக்கும் ஆதலான், இவனும் நடுவுநிலைமையை யுடையவன் என்று கூறப்பட்டது. |
தன்மை - இலக்கணம். நுவலல் - சொல்லுதல். ஓகாரம் இரண்டும் வினா. |
(48) |
அவனஃ திவ்விடத் திவ்வியற்றென்றல்: |
அவன் அஃது இவ்விடத்து இவ்வியற்றென்றல் என்பது, தலைவன் என்னாற் காணப்பட்ட உரு இவ்விடத்து இவ்வியலை யுடையது என்று பாங்கற்குக் கூறல். |
| கனமே குழல்செங் கயலே விழிமொழி கார்க்குயிலே தனமே முகையென் தனிநெஞ்ச மேயிடை தன்பகைக்கு வனமே யருளிய வாணன்றென் மாறை மணிவரைசூழ் புனமே யிடமிங்ங னேயென்னை வாட்டிய பூங்கொடிக்கே. |
(இ-ள்.) இவ்வாறு என்னை வாட்டிய பூங்கொடி போல் வாட்கு இருப்பிடம், தன் பகைவர்க்குக் காடேயிடமாகக் கொடுத்த வாணனது தென்மாறை நாட்டு முத்தத்தையீனும் மூங்கில் சூழ்ந்த தினைப்புனமே; குழல்முகிலே; விழி செவ்வரி பொருந்திய கயலே; மொழி கருங்குயிலே; தனம் முகையே; இடை என் தனிமையாகிய நெஞ்சமே என்றவாறு. கனம் - முகில். கயல் - மீன். தனம் - முலை. முகை - மொக்குள். முணி - முத்தம். வரை - மூங்கில். புனம் - தினைப்புனம். இங்ஙனம் - இவ்வாறு. பூங்கொடி: ஆகுபெயர். |
|
1. திருவொற்றியூர்த் தேவாரம், செ. 9. |