|
|
(இ-ள்.) நெஞ்சமே! அழகிய பொன்னை யொழுக்குந் துறைகளையுடைய வையையாறு சூழ்ந்த தஞ்சைவாணனது பொதிய வெற்பில், ஆராயுந்தோறும் ஆராயுந்தோறுந் தெவிட்டாத இன்பமாந் தமிழையொத்தவளது செங்கனி வாயிலூறிய நீர் நுகருந்தோறும் தெவிட்டாமல் இன்பமாய், எனது ஆருயிர் இறந்துபடாமைக்குக் காரணமாகிய அமிழ்தாகின்றதாதலால், இவ்வுலகில் உம்பர்தம் பதத்தை என்போல எய்தினர் யார்? நானொழிய ஒருவருமில்லை என்றவாறு.
|
உம்பர் - தேவர். இம்பர் - இவ்வுலகு. வார்தல் - ஒழுகுதல். தேர்தல் - ஆராய்தல். செங்கனிவாய்: ஆகுபெயர். ஆர்தல் - நுகர்தல். ஆருயிர் - அரிய வுயிர். மலயவெற்பு - பொதியவெற்பு. `மலயவெற்பிற் றமிழ்` என்றது. அவ்வெற்பில் தமிழ் பிறத்தலான் என்க. இறப்பைத் தீர்த்தலால் அமிழ்தம் என்றது. அவ்வெற்பில் தமிழ் பிறத்தலான் என்க. இறப்பைத் தீர்த்தலால் அமிழ்தம் என்றது. `வாணன் மலயவெற்பு` என்புழி ஆறனுருபு நிலப்பிறிதின் கிழமைப் பொருளாய்த் தொக்கது. நெஞ்சம்: முன்னிலையெச்சம். |
(59) |
புகழ்தல்: |
புகழ்தல் என்பது, புகழ்ந்து கூறல்.
|
| தழல்கண்ட தன்ன கலிவெம்மை யாறத்தன் தண்ணளியாம் நிழல்கண்ட சந்திர வாணன்தென் மாறை நிழல்பொலியுங் கழல்கண்ட தன்ன கதிர்முத்த மாளிகைக் காரிகைநின் குழல்கண்ட பின்னல்ல வோஅறல் நீருட் குளித்ததுவே.
|
(இ-ள்.) தழலைக் கண்டதுபோன்ற கலியினது வெப்பந் தணியத் தனது அருளாகிய நிழலாக்கிக்கண்ட சந்திரவாணனது தென்மாறை நாட்டிற் றோன்றும் ஒளிமிகுந்த கழற்காய் போல, பரிதாகிய கதிரெறிக்கும் முத்துமாளிகையையுடைய காரிகை, நினது கூந்தலைக் கண்ட பின்னல்லவோ முன் வெளிப்பட்டிருந்த அறலானது நாணி இப்போது நீருட் குளித்திருக்கின்றது என்றவாறு.
|
தழல் நெருப்பு. கலி - கலியுகம். வெம்மை - வெப்பம். அளி - அருள். நிழல் - ஒளி. பொலிதல் - மிகுதல். கழல்: ஆகுபெயர். கதிர் - ஒளி. காரிகை: அண்மைவிளி. குழல் - கூந்தல். அறல் - கருமணல். குளித்தல் - மூழ்கல். `நின்குழல்` என்புழி ஆறாம் வேற்றுமை யுறுப்புத் தற்கிழமைக்கண் வந்தது. `அல்லவோ` என்புழி ஓகாரம் எதிர்மறை. |
(60) |