|
|
| பூட்டிய வார்சிலை வீரரை வென்றெப் பொருப்பினுஞ்சீர் தீட்டிய வாணன்தென் மாறையன் னீரிதழ்ச் செம்மையுமை ஊட்டிய வானின் கருமையுந் தான்கொண் டுமக்கிங்ஙனே சூட்டிய வாறுநன் றால்முல்லை மாலை சுனைப்புனலே.
|
(இ-ள்.) நாண்பூட்டிய வில் வீரரை வெற்றி கொண்டு குலமலைகள் எட்டினும் கீர்த்தியைப் பொறித்த வாணனது தென்மாறை நாட்டை யொப்பீர், நுமது இதழின் செம்மையும் மையூட்டிய வாள்போன்ற கண்ணின் கருமையும் தாவென வாங்கிக் கொண்டு உமக்கு இவ்வாறு கைம்மாறாகச் சுனைப்புனலானது முல்லை மாலையைச் சூட்டியவாறு நன்று என்றவாறு.
|
`வார் பூட்டிய` என மாறுக. வார் - நாண். பொருப்பு - குலமலை. சீர் - கீர்த்தி. தீட்டல் - எழுதல். ஊட்டல் - உட்கொள வைத்தல். வாள் : ஆகுபெயர். ஆல் : அசை.
|
தலைவன் பாங்கற்கூட்டத்தில் தலைவியைப் பாங்கிற் கூட்டும் போது நின் காதலியொடு நீ வருக எனக் கூறிக் கற்புடைய வளென்றெண்ணி, கற்புடைய மகளிர் முல்லைமாலை சூடுவது இயல்பாதலான், முல்லைமாலை சூட்டி விடுத்ததனால், தலைவியும் தலைவன் சொல்லைக் கடவாளாதலால், தன் கற்புடைமை தன் உயிர்ப்பாங்கி யறியவேண்டுமென்று கருதி, தலைவன் சூட்டிய முல்லை மாலையை மறையாது வந்தாளாதலால் அதுகண்டு கூறினாளென்று உணர்க.
|
தலைவன் சூட்டினான் என்பது என்னை யெனின்,
|
| 1`ஆணெடுந் தானையை யாற்றுக் குடிவென்ற கோன்பொதியில் சேணெடுங் குன்றத் தருவிநின் சேவடி தோய்ந்ததில்லை வாணெடுங் கண்ணுஞ் சிவப்பச்செவ் வாயும் விளர்ப்பவண்டார் தாணெடும் போதவை சூட்டவற் றோவத் தடஞ்சுனையே`
|
என்னும் இறையனார் அகப்பொருளில் 2`முன்னுறவுணர்தல்` என்னுஞ் சூத்திர வுரையில் இக்கிளவிக்குப் `போதவை சூட்ட வற்றோ வத்தடஞ்சுனை` என்றமையான், தலைவன் போதுசூட்டினானென்று உணர்க.
|
|
1. இறையனார் அகப்பொருள் - 7. |