பாங்கி மதியுடன்பாடு
95

 
 1`வேற்றுறும யல்வழி இஐ யென்னும்
ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய
அவைதாம், இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழா குநவும் என்மனார் புலவர்`

     என்னுஞ்  சூத்திரவிதியால்,   இகர   ஐகார   ஈற்றுப் பதங்கள்  இயல்பாய்
முடிவனவும்,   வல்லெழுத்து   மிகுவனவும், உறழ்வாய் முடிவனவுமாகிய  மூவகை
முடிபினுள், தினைகுறிது - தினைக்குறிது   என்றாற்போல, வரைதாழ் - வரைத்தாழ்
என உறழ்ச்சி முடிபாயின வென்று உணர்க.
(71)    
கெடுதி வினாதல்:
கெடுதிவினாதல் என்பது, கெட்டபொருளை வினாதல்.

 தண்பட்ட மேவும் வயற்றஞ்சை வாணன் தமிழ்ச்சிலம்பில்
பண்பட்ட தேமொழிப் பாவையன் னீர்பனை பட்டகையும்
மண்பட்ட கோடு மதம்பட்ட வாயும் வடிக்கணைதோய்
புண்பட்ட மேனியு மாய்வந்த தோவொரு போர்க்களிறே.

(இ-ள்.) தண்ணிய   வோடையும்  பொருந்திய  வயலும் சூழ்ந்த  தஞ்சைவாணனது
பொதியவெற்பிடத்துப்   பண்ணுண்டாகப்   பட்ட இனிய மொழியையுடைய பாவை
போல்வீர்! பனைபோலுண்டாகிய   கையும்,   தன்னிழலைச் சுளித்துப்  பாய்தலான்
மண்பட்ட கோடும், கரடத்தானத்திலிருந்து   வடிந்தொழுகும்  மதம்பட்ட   வாயும்,
கூரிய   என்   கைக்கணை மூழ்கலால் புண்பட்ட வுடலுமாய் ஒரு போர்க்  களிறு
நும் புனத்தயலே வந்ததோ? கண்டிரேல் சொல்லுவீராக என்றவாறு.

பட்டம் - ஓடை.   பட்டமும்    வயலும்   என   உம்மைத்தொகை. மேவுதல் -
பொருந்துதல். தமிழ்ச்சிலம்பு - பொதியமலை. பண் - இசை. படுதல் - உண்டாதல்.
தேம் - இனிமை.       பாவை - சித்திரப்   பாவை.        பனைபட்ட கை -
பனைபோலுண்டாகிய கை;   உவமத்தொகை.   வடி - வடித்தல். களிறு - யானை.
உம்மை - எண்ணின் கண் வந்தன.    கெடுதி வினாதல்; வேழம் வினாதல், பன்றி
வினாதல், நாய் வினாதல்    இனையவினாதல் எனப் பலவும் உள; அவற்றுள் இது
வேழம் வினாதல்.
(72)    

1. தொல், எழு. தொகைமரபு - 16.