|
|
ஒழிந்தது வினாதல்: |
ஒழிந்தது வினாதல் என்பது, இவன் வினாயதற்கு விடையின் மையால், நீர் பேசாதொழிந்தது என் என வினாதல்.
|
| வனமார் குடிஞைப் பகைக்குர லாமென வாணன்தஞ்சைப் புனமார் குளிரிப் புடைப்பொலி யாற்கிள்ளை போயினமீண் டினமா மெனவந்திவ் வேனலெல் லாம்வவ்வு மென்பதற்கோ கனமா நறுங்குழ லீர்மொழி யாதொழி காரணமே.
|
(இ-ள்.) வாணனது தஞ்சைநாட்டில் முகில் போன்ற கருமையாகிய நறிய குழலீர்! மொழியா தொழிந்த காரணம், காட்டிலார்ந்த கூகைக்குப் பகையாகிய காக்கைக் குரலாமென, புனத்திற் பொருந்திய குளிரி யென்னும் கருவியை நுங் கையாற் புடைத்திடும் ஓசையால் வெருண்டு போயின கிளிகளெல்லாம், நீர் வாய் திறந்து மொழியின் நுமது குரலென்றறியாது, கிளிக் குரலென் றெண்ணி மீண்டு வந்து, இவ்வேனற் கதிரையெல்லாங் கவரும் என்பதனாலோ சொல்லுவீர் என்றவாறு.
|
`வாணன் தஞ்சைக் கனமா நறுங்குழலீர்` எனவும் `பகைக் குரலாமெனப் புனமார் குளிரி` எனவும், `போயின கிள்ளை` எனவும் மாறிக் கொள்க; என்னை,
|
| 1`மொழிமாற் றியற்கை, சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல்`
|
என்னுஞ் சூத்திர விதியால், மொழிமாற்றிப் பொருளுரைத்துக் கொள்க.
|
`நல்லவரே சொல்லுவீர்` என்றும், `வஞ்சியன்னீர் உரைமின்கள்` என்றும், `பாவையன்னீர்` என்றும், `கனமாநறுங் குழலீர்` என்றும், வினாதல் நான்கினும் பன்மையாற் கூறிய சொற்கள் பாங்கி யொருத்தியையே.
|
| 2`ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்` |
என்னும் சூத்திரவிதியாற் கூறிய உயர்சொற் கிளவி யென்று உணர்க. தலைவியும் கூட விருந்தாளெனில் வருங்குற்றம் என்னவெனின், குற்றம் உண்டு. என்னை, `இருவரு முள்வழி யவன்வர வுணர்தல்` என மேலே கூறப்படுதலின், இங்ஙனம் இருவரும் உடனிருந்தார் என்று கூறலாகாது என வுணர்க.
|
|
1. தொல். சொல். எச்சவியல் - 13. |
2. தொல். சொல். கிளவியாக்கம் - 27. |