|
|
(இ-ள்.) வாணனது தஞ்சைசூழ்ந்த நுண்ணிய தாது பொருந்திய சோலைநிழலில் தண்ணிய தாமரை மலரிலிருக்குந் திருமகளும் பார்மங்கையாகிய நிலமகளும் போல, வண்டார் குழலின் மடவாராகிய தலைவியும் பாங்கியும் சேர்ந்திருந்தாராதலால், நாம் போய் அந் நுடங்கிடையாரைக் கண்டு நமது காதலெல்லாஞ் சொல்ல இது நல்ல செவ்வி என்றவாறு. பொன் - திருமகள். பார்மங்கை - நிலமகள். மணத்தல் - சேர்தல். தாது - பராகம். பொங்கர் - சோலை. அடங்கல் - ஓசிதல். `இடையார்க் கண்டு` என்புழி, இரண்டனுருபு தொக்கது. உம்மை: எண்ணும்மை. ஏகாரம்: ஈற்றசை. காலம் - செவ்வி: செவ்வி, பதம், அமயம், காலம் என்பன ஒரு பொருட்கிளவி. |
(76) |
தலைவன் அவ்வகை வினாதல்: |
தலைவன் அவ்வகை வினாதல் என்பது, தலைவன் முன் கெடுதி வினாதல்போல மீண்டு கலைவந்ததோ என்று வினாதல்.
|
| வல்லா ரிளங்கொங்கை வஞ்சியன் னீர்தஞ்சை வாணனைக்கண் டொல்லார் களத்தி னுடைந்தது போல வாருகலைபோர் வில்லார் கணைதைப்ப மெய்சோர்ந் தினம்விட்டு வெய்துயிர்த்துப் புல்லார் வதுமின்றி யேவந்த தோநும் புனத்தயலே. |
(இ-ள்.) சூதுபோன்ற இளங்கொங்கையையுடைய வஞ்சிக்கொம்பு போல்வீர்! தஞ்சைவாணனைக் கண்டு பகைவர் போர்க்களத்தில் உடைந்து ஓடியது. போலப், போர் செய்யும் எனது கையில் வில்லார்ந்த கணை தைப்ப ஒரு கலைமான் மெய் சோர்ந்து இனத்தைப் பிரிந்து பெருமூச்செறிந்து புல்லருந்தலுமின்றி நும் புனத்தயலிலே வந்ததோ? கண்டீராயிற் சொல்லுவீர் என்றவாறு.
|
வல் - சூது. ஆர் - ஒப்பு. ஒல்லார் - பகைவர். களம் - போர்க்களம். உடைதல் - படை தட்டழிதல். சோர்தல் - மயங்கல். விடுதல் - பிரிதல். வெய்துயிர்த்தல் - பெருமூச்செறிதல். ஆர்தல் - அருந்தல். வினையெச்ச அடுக்குகள், `வந்ததோ` என்னும் வினாப் பொருண்மை வினை கொண்டு முடிந்தன. ஓகாரம்: வினா. |
(77) |
எதிர்மொழி கொடுத்தல்: |
| வாக்குந் திறனு மதனையொப் பீர்தஞ்சை வாணன்மஞ்சு தேக்குங் குடுமிச் சிறுமலைக் கேதிரி கோட்டிரலை கோக்குஞ் சரமுங் குருதியுஞ் சோரக் கொடிச்சியரேம் காக்கும் புனமருங் கேதனி யேவரக் கண்டிலமே.
|