1.
உயர் பிறப்பு
கடல் உலகில் வாழும் உயிர் எழுபிறப்பின் உள்மிக்க
காட்சிபெறு நர சன்மமாய்க்
கருதப் பிறத்தல் அரிது அதினும்உயர் சாதியில்
கற்புவழி வருதல் அரிது;
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது
வருதல் அதுதனினும் அரிது;
வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்று எண்ணி
மாசில்வழி நிற்றல் அரிது;
நெடிய தனவான் ஆதல் அரிது அதில் இரக்கம்உள
நெஞ்சினோன் ஆதல் அரிது;
நேசமுடன் உன்பதத்து அன்பனாய் வருதல்இந்
நீள்நிலத்து அதினும் அரிதாம்;
அடியவர்க்கு அமுதமே! மோழை பூபதி பெற்ற
அதிபன் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|