12. பதர்
மாறாத
கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
வாயிலாதவன் ஒரு பதர்;
வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
மனக்கோழை தான் ஒரு பதர்;
ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசிஎன்று
இகழ நிற்பான் ஒரு பதர்;
இல்லாள் புறம் செலச் சம்மதித்து அவளோடு
இணங்கி வாழ்பவன் ஒரு பதர்;
வேறு ஒருவர் மெச்சாது தன்னையே தான் மெச்சி
வீண்பேசுவான் ஒரு பதர்;
வேசையர்கள் ஆசைகொண்டு உள்ளளவும் மனையாளை
விட்டு விடுவான் ஒரு பதர்;
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய்
அமல! எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|