13.
செய்ய வேண்டும்
வாலிபம் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற
வழியிலே நிற்க வேண்டும்;
வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி
வளர் அறம் செய்ய வேண்டும்;
சீலம் உடையோர்களைச் சேரவேண்டும்;பிரிதல்
செய்யாது இருக்க வேண்டும்
செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண்டும்;கொண்டு
தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பலதருமம் நாட்டவேண்டும்;நாட்டி
நன்றாய் நடத்த வேண்டும்;
நம்பன் இணை அடி பூசை பண்ணவேண்டும்;பண்ணி
னாலும் மிகு பத்தி வேண்டும்
ஆலம் அமர் கண்டனே! பூதி அணி முண்டனே!
அனக! எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|