17.
நல்லோர் - 2
அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
அவனே மகா புருடனாம்;
அஞ்சாமல் எதுவரினும் எதுபோகினும் சித்தம்
அசைவு இலன் மகா தீரனாம்;
தொடுத்து ஒன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
தோன்றலே மகராசனாம்;
தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
துரையே மகா மேருவாம்!
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த்து இரட்சிக்கும்
அவனே மகா தியாகியாம்;
அவரவர் தராதரம் அறிந்து மரியாதை செயும்
அவனே மகா உசிதன்ஆம்;
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|