24.
ஒன்றுக்குஒன்று ஆதரவு
வானவர் பிதிர்க்கள்
முச்சுடர் மூவர் கோள்கட்கும்
வாழ்வு தரும் உதவி புவனம்
வளம்மிக்க புவனம் தனக்கு மேன்மேல்உதவி
வாழ்வு பெற்றிடு மன்னராம்!
தேனமர் நறுந்தொடையல் புனை மன்னவர்க்கு உதவி
சேர்ந்த குடிபடை வர்க்கம் ஆம்;
சேர்குடி படைக்கு உதவி விளை பயிர்! பயிர்க்கு உதவி
சீர்பெற வழக்கு மழையாம்!
மேல் நிமிர் மழைக்கு உதவி மடமாதர் கற்பு ஒன்று;
வேந்தர் தம் நீதி ஒன்று
வேதியர் ஒழுக்கம் ஒன்று இம் மூன்றுமே என்று
மிக்க பெரியோர் உரை செய்வார்
ஆனமர் நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே!
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|