29. ஒழுகும் முறை

மாதா பிதாவினுக்கு உள்ளன்புடன் கனிவு
     மாறாத நல்லொழுக்கம்;
  மருவு குரு ஆனவர்க்கு இனிய உபசாரம் உள
     வார்த்தை வழி பாடு அடக்கம்;
காது ஆர் கருங்கண் மனையாள் தனக்கோ சயன
     காலத்தில் நய பாடணம்;
  கற்ற பெரியோர் முதியர் வரும் ஆதுலர்க்கு எலாம்
     கருணை சேர் அருள் விதானம்;
நீதி பெறும் மன்னவர் இடத்து அதிக பய வினயம்;
     நெறியுடைய பேர்க்கு இங்கிதம்;
  நேயம் உள தமர் தமக்கு அகம் மகிழ்வுடன் பரிவு
     நேரலர் இடத்தில் வைரம்
ஆதி மனுநூல் சொலும் வழக்கம் இது ஆகும் எமது
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை