51. மருத்துவன்
தாதுப் பரீட்சை வரு கால தேசத்தோடு
சரீர லட்சணம் அறிந்து,
தன்வந்த்ரி கும்ப முனி தேரர் கொங்கணர் சித்தர்
தமது வாகடம் அறிந்து
பேதம்பெருங் குளிகை சுத்திவகை மாத்திரைப்
பிரயோகமோடு பஸ்மம்
பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்
பேர் பெறுங் குணவாகடம்
சோதித்து, மூலிகாவித நிகண்டுங் கண்டு
தூய தைலம் லேகியம்
சொல் பக்குவம் கண்டு வரு ரோக நிண்ணயம்
தோற்றியே அமிர்தகரனாய்,
ஆதிப் பெருங்கேள்வி உடையன் ஆயுர்வேதன்
ஆகும்; எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|