58.
இவையே போதும்
பொய்யாத வாய்மையும்
சீலமும் சார்ந்து உளோர்
பூவலம் செய வேண்டுமோ?
பொல்லாத கொலை களவு இலாத நன்னெறி உளோர்
புகழ்அறம் செய வேண்டுமோ?
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்
நல்லறம் செய வேண்டுமோ?
நல் மனோசுத்தி உண்டான பேர் மேலும் ஒரு
நதி படிந்திட வேண்டுமோ?
மெய்யா நின் அடியரைப் பரவுவோர் உன்பதம்
விரும்பி வழிபட வேண்டுமோ?
வேதியர் தமைப் பூசை பண்ணுவோர் வானவரை
வேண்டி அர்ச்சனை செய்வரோ?
ஐயாறுடன் கமலை சோணாசலம் தில்லை
அதிபனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|