59. அரியர்
பதின்மரில்
ஒருத்தர் சபை மெச்சிடப் பேசுவோர்!
பாடுவோர் நூற்றில் ஒருவர்!
பார் மீதில் ஆயிரத்து ஒருவர் விதி தப்பாது
பாடி ப்ரசங்கம் இடுவோர்!
இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர்!
இதை அறிந்து இதயம் மகிழ்வாய்
ஈகின்ற பேர் புவியிலே அருமையாகவே
இலக்கத்திலே ஒருவராம்!
துதி பெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த்
தூயர் கோடியில் ஒருவர் ஆம்.
தொல் உலகு புகழ்காசி ஏகாம்பரம் கைலை
சூழும் அவிநாசி பேரூர்
அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|