60. கற்பு மேம்பாடு

தன் கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்
     தனக்கு இணங்காத நிறையாள்,
  தழல் கதிர் எழாமலும் பொழுது விடியாமலும்
     சாபம் கொடுத்த செயலாள்,
மன்னி வளர் அழல் மூழ்கி உலகு அறிய வேதனது
     மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,
  மைந்தனைச் சுட வந்த இறைவன் தடிந்த வடி
     வாள் மாலையான கனிவாள்,
நல் நதி படிந்திடுவது என்னஆர் அழல் மூழ்கி
     நாயகனை மேவு தயவாள்,
  நானிலம் புகழ்சாலி, பேர் பெறு நளாயினி,
     நளின மலர் மேல் வைதேகி
அன்னம் என வரு சந்த்ரமதி துரோபதை என்பர்
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை