62.
சகுனம் - 1
சொல் அரிய
கருடன் வானரம் அரவம் மூஞ்சிறு
சூகரம் கீரி கலைமான்
துய்ய பாரத்வாசம் அட்டை எலி புன்கூகை
சொல் பெருக மருவும் ஆந்தை
வெல் அரிய கரடி காட்டான் பூனை புலிமேல்
விளங்கும் இருநா உடும்பு
மிக உரை செய் இவை எலாம் வலம் இருந்து இடம் ஆகில்
வெற்றி உண்டு அதிக நலம் ஆம்;
ஒல்லையின் வழிப் பயணம் ஆகும் அவர் தலைதாக்கல்,
ஒரு துடை இருத்தல், பற்றல்,
ஒரு தும்மல், ஆணை இடல், இருமல், போகேல் என்ன
உபசுருதி சொல் இவை எலாம்
அல்லல் தரும் நல்ல அல என்பர்; முதியோர் பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|