66.
நற்பொருளில் குற்றம்
பேரான கங்கா
நதிக்கும் அதன் மேல் வரும்
பேனமே தோடம் ஆகும்!
பெருகி வளர் வெண் மதிக்கு உள் உள் களங்கமே
பெரிதான தோடம் ஆகும்!
சீராம் தபோதனர்க்கு ஒருவர் மேல் வருகின்ற
சீற்றமே தோடம் ஆகும்!
தீதில் முடி மன்னவர் விசாரித்திடாது ஒன்று
செய்வது அவர் மேல் தோடம் ஆம்!
தாராளமா மிகத் தந்துளோர் தாராமை
தான் இரப்போர் தோடம் ஆம்!
சாரம் உள நல் கருப்பஞ் சாறு கைப்பது அவர்
தாலம் செய் தோடம் ஆகும்!
ஆராயும் ஒரு நான்மறைக்கும் எட்டாது ஒளிரும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|