80.
பயன் இலாதவை
சமயத்தில்
உதவாத நிதியம் ஏன்? மிக்க துயர்
சார்பொழுது இலாத கிளை ஏன்?
சபை முகத்து உதவாத கல்வி ஏன்? எதிரி வரு
சமரத்து இலாத படை ஏன்?
விமலனுக்கு உதவாத பூசை ஏன்? நாளும் இருள்
வேளைக்கு இலாத சுடர் ஏன்?
வெம்பசிக்கு உதவாத அன்னம் ஏன்? நீடு குளிர்
வேளைக்கு இலாத கலை ஏன்?
தமது தளர் வேளைக்கு இலாத ஓர் மனைவி ஏன்?
சரசத்து இலாத நகை ஏன்?
சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?
தரணி மீது என்பர் கண்டாய்!
அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|