90. காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்

வனசம், செழும் சூதமுடன், அசோகம் தளவம்,
     மலர் நீலம் இவை ஐந்துமே
  மார வேள் கணைகளாம்; இவை செயும் குணம்; முளரி
     மனதில் ஆசையை எழுப்பும்;
வினவில் ஒண் சூதமலர் மெய்ப் பசலை உண்டாக்கும்;
     மிக அசோகம் அது உயர் செயும்;
  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம் உயிர் போக்கி விடும்;
     மேவும் இவை செயும் அவத்தை;
நினைவில் அதுவே நோக்கம், வேறொன்றில் ஆசை அறல்,
     நெட்டுயிர்ப்பொடு பிதற்றல்,
  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
     நேர்தல், மௌனம் புரிகுதல்,
அனை உயிர் உண்டில்லை என்னல் ஈர் ஐந்தும் ஆம்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை