93.
நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்
சுவை சேர் கரும்பை
வெண் பாலைப் பருத்தியைச்
சொல்லும் நல் நெல்லை எள்ளைத்
தூய தெங்கின் கனியை எண்ணாத துட்டரைத்
தொண்டரைத் தொழு தொழும்பை
நவை தீரு மாறு கண்டித்தே பயன் கொள்வர்
நற்றமிழ்க் கவிவாணரை
நலம் மிக்க செழுமலரை ஓவியம் எனத் தக்க
நயம் உள்ள நாரியர் தமைப்
புவி மீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்
போர் வீரரைத் தூயரைப்
போதவும் பரிவோடு இதம் செய்ய மிகு பயன்
புகழ் பெறக் கொள்வர் கண்டாய்
அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|