95. இல்லறம்
தந்தை தாய்
சற்குருவை இட்ட தெய்வங்களைச்
சன்மார்க்கம் உள மனைவியைத்
தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்
தனை நம்பி வருவோர்களைச்
சிந்தை மகிழ்வு எய்தவே பணி விடை செய்வோர்களைத்
தென்புலத்தோர் வறிஞரைத்
தீதிலா அதிதியைப் பரிவு உடைய துணைவரைத்
தேனுவைப் பூசுரர் தமைச்
சந்ததம் செய்கடனை என்றும் இவை பிழையாது
தான் புரிந்திடல் இல்லறம்;
சாரு நலம் உடையராம் துறவறத்தோரும் இவர்
தம்முடன் சரியாயிடார்!
அந்தரி உயிர்க்கு எலாந் தாய் தனினும் நல்லவளுக்கு
அன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|