11. தகாத சேர்க்கை

பூத தயை இல்லாத லோபியர் இடத்திலே
     பொருளை அருளிச் செய்தனை!
  புண்ணியம் செய்கின்ற சற்சனர் இடத்திலே
     பொல்லாத மிடி வைத்தனை!
நீதி அகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க
     நெறி மாதரைத் தந்தனை!
  நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு
     நீலியைச் சோவித்தனை!
சாதியில் உயர்ந்த பேர் ஈனர் பின்னே சென்று
     தாழ்ந்து பரவச் செய்தனை!
  தமிழ் அருமை அறியாத புல்லர் மேல் கவிவாணர்
     தாம் பாடவே செய்தனை!
ஆதரவு இலாமல் இப்படி செய்தது என் சொலாய்?
     அமல! எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

12. பதர்

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
     வாயிலாதவன் ஒரு பதர்;
  வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
     மனக்கோழை தான் ஒரு பதர்;
ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசிஎன்று
     இகழ நிற்பான் ஒரு பதர்;
  இல்லாள் புறம் செலச் சம்மதித்து அவளோடு
     இணங்கி வாழ்பவன் ஒரு பதர்;
வேறு ஒருவர் மெச்சாது தன்னையே தான் மெச்சி
     வீண்பேசுவான் ஒரு பதர்;
  வேசையர்கள் ஆசைகொண்டு உள்ளளவும் மனையாளை
     விட்டு விடுவான் ஒரு பதர்;
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய்
     அமல! எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

13. செய்ய வேண்டும்

வாலிபம் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற
     வழியிலே நிற்க வேண்டும்;
  வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி
     வளர் அறம் செய்ய வேண்டும்;
சீலம் உடையோர்களைச் சேரவேண்டும்;பிரிதல்
     செய்யாது இருக்க வேண்டும்
  செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண்டும்;கொண்டு
     தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பலதருமம் நாட்டவேண்டும்;நாட்டி
     நன்றாய் நடத்த வேண்டும்;
  நம்பன் இணை அடி பூசை பண்ணவேண்டும்;பண்ணி
     னாலும் மிகு பத்தி வேண்டும்
ஆலம் அமர் கண்டனே! பூதி அணி முண்டனே!
     அனக! எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

14. மேன்மேல் உயர்ச்சி

தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்
     சாமர்த்தியம் உள புருடன் ஆம்
  சந்ததம் பதின்மரைக் காப்பாற்றுவோன் மிக்க
     தரணி புகழ் தருதேவன் ஆம்.
பொன் மட்டிலாமல் ஈந்து ஒரு நூறு பேரைப்
     புரப்பவன் பொருஇல் இந்த்ரன்,
  புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
     புண்யவானே பிரமன் ஆம்
நன்மைதரு பதினாயிரம் பேர் தமைக்காத்து
     ரட்சிப்பவன் செங்கண்மால்,
  நாளும் இவன் மேல் அதிகமாக வெகுபேர்க்கு உதவு
     நரனே மகாதேவன் ஆம்,
அல் மட்டுவார் குழலி பாகனே! ஏகனே!
     அண்ணல்எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

15. செயற்கு அருஞ் செயல்

நீர் மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!
     நெருப்பை நீர் போல் செய்யலாம்!
  நெடிய பெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!
     நீள் அரவினைப் பூணலாம்!
பார் மீது மணலைச் சமைக்கலாம் சோறு எனப்
     பட்சமுடனே உண்ணலாம்!
  பாணமொடு குண்டு விலகச் செய்யலாம்! மரப்
     பாவை பேசப் பண்ணலாம்!
ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்
     எடுக்கலாம்! புத்தி சற்றும்
  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே
     எவருக்கும் முடியாது காண்!
ஆர்மேவு கொன்றை புனை வேணியா! சுரர்பரவும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

16. நல்லோர் - 1

செய்ந்நன்றி மறவாத பேர்களும், ஒருவர் செய்
     தீமையை மறந்த பேரும்,
  திரவியம் தரவரினும் ஒருவர் மனையாட்டிமேல்
     சித்தம் வையாத பேரும்,
கை கண்டு எடுத்த பொருள் கொண்டு போய்ப் பொருளாளர்
     கையில் கொடுத்த பேரும்,
  காசினியில் ஒருவர் செய் தருமம் கெடாதபடி
     காத்தருள் செய்கின்ற பேரும்,
பொய் ஒன்று நிதிகோடி வரினும் வழக்கு அழிவு
     புகலாத நிலைகொள் பேரும்.
  புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
     பொய்ம்மை உரையாத பேரும்,
ஐய இங்கு இவர் எலாம் சற்புருடர் என்று உலகர்
     அக மகிழ்வர்! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

17. நல்லோர் - 2

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
     அவனே மகா புருடனாம்;
  அஞ்சாமல் எதுவரினும் எதுபோகினும் சித்தம்
     அசைவு இலன் மகா தீரனாம்;
தொடுத்து ஒன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
     தோன்றலே மகராசனாம்;
  தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
     துரையே மகா மேருவாம்!
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த்து இரட்சிக்கும்
     அவனே மகா தியாகியாம்;
  அவரவர் தராதரம் அறிந்து மரியாதை செயும்
     அவனே மகா உசிதன்ஆம்;
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே!
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

18. இல்லை

காமிக்கு முறை இல்லை; வேசைக்கு நாண் இல்லை;
     கயவர்க்கு மேன்மை இல்லை;
  கன்னம் இடு கள்வருக்கு இருளில்லை; விபசார
     கன்னியர்க்கு ஆணை இல்லை;
தாம் எனும் மயக்கறுத்து ஓங்கு பெரியோர்க்கு வரு
     சாதி குலம் என்பதில்லை;
  தாட்சணியம் உடைய பேர்க்கு இகலில்லை; எங்கும் ஒரு
     சார்பிலார்க்கு இடமது இல்லை;
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான
     புகழென்பது ஒன்றும் இல்லை;
  புலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்
     புருடருக்கு ஒன்றும் இல்லை;
யாமினி தனக்கு நிகர் கந்தரத்து இறைவனே
     அன்புடைய அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

19. நிலையாமை

காயம் ஒரு புற்புதம்! வாழ்வு மலை சூழ்தரும்
     காட்டில் ஆற் றின் பெருக்காம்!
  கருணை தரு புதல்வர் கிளை மனை மனைவி இவை எலாம்
     கானல் காட்டும் ப்ரவாகம்!
மேய புய பலவலிமை இளமை அழகு இவை எலாம்
     வெயில் மஞ்சள்! உயிர் தானுமே,
  வெட்ட வெளி தனில் வைத்த தீபம் எனவே கருதி,
     வீண் பொழுது போக்காமலே
நேய முடனே தெளிந்து அன்பொடு உன் பாதத்தில்
     நினைவு வைத்திரு போதினும்
  நீர்கொண்டு மலர்கொண்டு பரிவு கொண்டு அர்ச்சிக்க
     நிமலனே! அருள் புரிகுவாய்
ஆயும் அறிவாளர் பணி பாதனே! போதனே!
     அண்ணல் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

20. திருமகள் இருப்பிடம்

நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,
     நாகரிகர் மாமனையிலே,
  நளின மலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,
     நறை கொண்ட பைந்துளவிலே,
கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,
     கல்யாண வாயில் தனிலே,
  கடிநகர் இடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,
     கதிபெறு விளக்கு அதனிலே,
பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே
     பொய்யாத பேர் பாலிலே,
  பூந்தடந் தன்னிலே, பாற்குடத்து இடையிலே
     போதகத்தின் சிரசிலே
அற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்
     அண்ணல் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை