21. மூதேவி இருப்பிடம்

மிதம் இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,
     மிகுபாடையோர் இடத்தும்,
  மெய் ஒன்றிலாமலே பொய் பேசியே திரியும்
     மிக்க பாதகரிடத்தும்,
கதி ஒன்றும் இலர் போல மலினம் கொளும் பழைய
     கந்தை அணிவோர் இடத்தும்
  கடிநாய் எனச் சீறி எவரையும் சேர்க்காத
     கன்னி வாழ் மனைஅகத்தும்,
ததிசேர் கடத்திலும், கர்த்தபத்து இடையிலும்,
     சார்ந்த ஆட்டின் திரளிலும்
  சாம்பிணம் முகத்திலும் இவை எலாம் கவலை புரி
     தவ்வை வாழ் இடம் என்பர் காண்!
அதிரூப மலை மங்கை நேசனே! மோழைதரும்
     அழகன் எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

22. இருநிலையிலும் பயனற்றவை

குணம் அற்ற பேய் முருங்கைத் தழை தழைத்து என்ன?
     குட்டநோய் கொண்டும் என்ன?
  குரைக்கின்ற நாய்மடி சுரந்து என்ன ? சுரவாது
     கொஞ்சமாய்ப் போகில் என்ன?
மணம் அற்ற செம்முருக்கது பூத்து அலர்ந்து என்ன?
     மலராது போகில் என்ன?
  மதுரம் இல்லா உவர்க் கடல் நீர் கறுத்து என்ன?
     மாவெண்மை ஆகில் என்ன?
உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன? படராது
     உலர்ந்து தான் போகில் என்ன?
  உதவாத பேர்க்கு வெகு வாழ்வு வந்தால் என்ன?
     ஓங்கும் மிடிவரில் என்ன காண்?
அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

23. குறைந்தாலும் பயன்படல்

தறிபட்ட சந்தனக் கட்டை பழுது ஆயினும்
     சார் மணம் பழுது ஆகுமோ!
  தக்க பால் சுவறிடக் காய்ச்சினும் அது கொண்டு
     சார்மதுரம் குறையுமோ?
நிறைபட்ட கதிர்மணி அழுக்கு அடைந்தாலும் அதின்
     நீள்குணம் மழுங்கி விடுமோ?
  நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்
     நிறையும் மாற்றுக் குறையுமோ?
கறை பட்ட பைம்புயல் மறைத்தாலும் அது கொண்டு
     கதிர் மதி கனம் போகுமோ?
  கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும்
     காசினி தனிற் போகுமோ?
அறிவுற்ற பேரை விட்டு அகலாத மூர்த்தியே!
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

24. ஒன்றுக்குஒன்று ஆதரவு

வானவர் பிதிர்க்கள் முச்சுடர் மூவர் கோள்கட்கும்
     வாழ்வு தரும் உதவி புவனம்
  வளம்மிக்க புவனம் தனக்கு மேன்மேல்உதவி
     வாழ்வு பெற்றிடு மன்னராம்!
தேனமர் நறுந்தொடையல் புனை மன்னவர்க்கு உதவி
     சேர்ந்த குடிபடை வர்க்கம் ஆம்;
  சேர்குடி படைக்கு உதவி விளை பயிர்! பயிர்க்கு உதவி
     சீர்பெற வழக்கு மழையாம்!
மேல் நிமிர் மழைக்கு உதவி மடமாதர் கற்பு ஒன்று;
     வேந்தர் தம் நீதி ஒன்று
  வேதியர் ஒழுக்கம் ஒன்று இம் மூன்றுமே என்று
     மிக்க பெரியோர் உரை செய்வார்
ஆனமர் நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே!
     அதிபனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

25. இதனை இதுகண்டு மகிழும்

தந்தை தாய் மலர் முகம் கண்டு நின்று ஆலிப்பது
     அவர் தந்த சந்ததியது ஆம்!
  சந்த்ரோதயம் கண்டு பூரிப்பது உயர்வாவி
     தங்கு பைங்குமுத மலர் ஆம்!
புந்தி மகிழ் வாய்இரவி வருதல்கண்டு அக மகிழ்வ
     பொங்கு தாமரை மலர்கள் ஆம்!
  போதவும் புயல்கண்டு கண்களித்தே நடம்
     புரிவது மயூர இனம் ஆம்!
சிந்தை மகிழ்வாய் உதவு தாதா வினைக் கண்டு
     சீர் பெறுவது இரவலர் குழாம்
  திகழ் நீதி மன்னரைக் கண்டு களி கூர்வது இச்
     செகம் எலாம் என்பர் கண்டாய்!
அந்தி அம் வான் அனைய செம் சடாடவியனே!
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

26. ஆகாதவை

உள்ளன்பு இலாதவர் தித்திக்கவே பேசி
     உறவாடும் உறவும் உறவோ?
  உபசரித்து அன்புடன் பரிமாறிடாத
     சோறு உண்டவர்க்கு கன்னம் ஆமோ?
தள்ளாது இருந்து கொண்டு ஒருவர் போய்ப் பார்த்து வரு
     தக்க பயிர் பயிர் ஆகுமோ?
  தளகர்த்தன் ஒருவன் இல்லாமல் முன் சென்றிடும்
     தானையும் தானை யாமோ?
விள்ளாத போகம் இல்லாத பெண் மேல்வரு
     விருப்பமும் விருப்ப மாமோ?
  வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்
     மிக்க சீவனம் ஆகுமோ?
அள்ளாது இருங்கருணையாளனே! தேவர் தொழும்
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

27. நற்பண்புக்கு இடம் இலார்

வெறி கொண்ட மற்கடம் பேய் கொண்டு, கள் உண்டு
     வெம் கரஞ்சொறிப் புதரில்
  வீழ்ந்து, தேள் கொட்டிடச் சன்மார்க்கம் எள்ளளவும்
     மேவுமோ? மேவாது போல்,
குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,
     கூடவே இளமை உண்டாய்க்,
  கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் மிக்க
     குவலயந்தனில் அவர்க்கு,
நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்
     நிதானமும் பெரியோர்கள் மேல்
  நேசமும் ஈகையும் இவை எலாம் கனவிலும்
     நினைவிலும் வராது கண்டாய்;
அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

28. இவர் இன்ன முறையர்

தன்னால் முடிக்க ஒண்ணாத காரியம் வந்து
     தான் முடிப்போன் தமையன் ஆம்;
  தன் தலைக்கு இடர் வந்த போது மீட்டு உதவுவோன்
     தாய் தந்தை என்னல் ஆகும்;
ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்த போது
     உதவுவோன் இட்ட தெய்வம்;
  உத்தி புத்திகள் சொல்லி மேல் வரும் காரியம்
     உரைப்பவன் குரு என்னல் ஆம்;
எந்நாளும் வரும் நன்மை தீமை தனது என்னவே
     எண்ணி வருவோன் பந்து ஆம்;
  இருதயம் அறிந்து தன் சொற்படி நடக்கும் அவன்
     எவன் எனினும் அவனே சுதன்
அம் நாரமும் பணியும் எந்நாளுமே புனையும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

29. ஒழுகும் முறை

மாதா பிதாவினுக்கு உள்ளன்புடன் கனிவு
     மாறாத நல்லொழுக்கம்;
  மருவு குரு ஆனவர்க்கு இனிய உபசாரம் உள
     வார்த்தை வழி பாடு அடக்கம்;
காது ஆர் கருங்கண் மனையாள் தனக்கோ சயன
     காலத்தில் நய பாடணம்;
  கற்ற பெரியோர் முதியர் வரும் ஆதுலர்க்கு எலாம்
     கருணை சேர் அருள் விதானம்;
நீதி பெறும் மன்னவர் இடத்து அதிக பய வினயம்;
     நெறியுடைய பேர்க்கு இங்கிதம்;
  நேயம் உள தமர் தமக்கு அகம் மகிழ்வுடன் பரிவு
     நேரலர் இடத்தில் வைரம்
ஆதி மனுநூல் சொலும் வழக்கம் இது ஆகும் எமது
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

30. குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல்

துட்ட விகடக் கவியை யாருமே மெச்சுவர்;
     சொல்லும் நற் கவியை மெச்சார்
  துர்ச்சனர்க்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார் வரும்
     தூயரைத் தள்ளி விடுவார்
இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார்; கறுப்பு
     என்னிலோ போய்ப் பணிகுவார்;
  ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார்; வேசை
     என்னிலோ காலில் வீழ்வார்;
நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின்
     நன்றாகவே பேசிடார்;
  நாளும் ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு
     நன்மை பலவே செய்குவார்;
அட்டதிசை சூழ் புவியில் ஓங்கு கலி மகிமை காண்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை