41. தூய்மை

வாம் பரிதனக்கு அதிக புனிதம் முகம் அதனிலே;
     மறையவர்க்கு உயர் புனிதமோ
  மலர் அடியிலே; புனிதம் ஒளிகொள் கண்ணாடிக்கு
     மாசில் முன்புறம் அதனிலே;
மேம்படும் பசுவினுக்குப் பின்புறத்திலே;
     மிக்க மட மாதருக்கோ
  மேனி எல்லாம் புனிதம் ஆகும்; ஆசௌசமொடு
     மேவு வனிதையர் தமக்கும்
தாம்பிரம் அதற்கும் மிகு வெள்ளி வெண்கலம் அயம்
     தங்கம் ஈயம் தமக்கும்
  தரும் புனிதம் வரு பெருக கொடு புளி சுணம் சாம்பல்
     சாரும் மண் தாது சாணம்
ஆம்புனிதம் இவை என்பர்; மாமேரு வில்லியே!
     அனகனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

42. அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி

கொடிய பொலிஎருதை இரு மூக்கிலும் கயிறு ஒன்று
     கோத்து வசவிர்த்தி கொள்வார்;
  குவலயந்தனின் மதக் களிறு அதனை அங்குசம்
     கொண்டு வசவிர்த்தி கொள்வார்;
படியில் விட அரவை மந்திர தந்திரத்தினால்
     பற்றி வசவிர்த்தி கொள்வார்;
  பாய் பரியை நெடிய கடிவாளம் அது கொடு நடை
     பழக்கி வசவிர்த்தி கொள்வார்;
விடம் உடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
     வீசி வசவீர்த்தி கொள்வார்;
  மிக்க பெரியோர்களும் கோபத்தை அறிவால்
     விலக்கி வசவிர்த்தி கொள்வார்;
அடியவர் துதிக்க வரு செந்தாமரைப் பதத்து
     ஜயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

43. ஒளியின் உயர்வு

செழுமணிக்கு ஒளி அதன் மட்டிலே! அதனினும்
     செய்ய கச்சோதம் எனவே
  செப்பிடும் கிருமிக்கு மிச்சம் ஒளி! அதனினும்
     தீபத்தின் ஒளி அதிகமாம்!
பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!
     பகல்வர்த்தி அதில் அதிகமாம்!
  பார மத்தாப்பின் ஒளி அதில் அதிகமாம்! அதிலும்
     பனி மதிக்கு ஒளி அதிகம்ஆம்!
விழைதரு பரிதிக்கும் மனு நீதி மன்னர்க்கும்
     வீர விதரணிகருக்கும்
  மிக்க ஒளி திசைதொறும் போய் விளங்கிடும் என்ன
     விரகுளோர் உரை செய்குவார்!
அழல் விழிகொடு எரி செய்து மதனவேள் தனை வென்ற
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

44. நன்று தீதுஆதல்

வான் மதியை நோக்கிடின் சோரர் காமுகருக்கு
     மாறாத வல்விடம் அதாம்!
  மகிழ்நன் தனைக் காணில் இதம் இலா விபசரிய
     மாதருக்கு ஓவிடம் அதாம்!
மேன்மை தரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்
     மிக்க பேர்க்கு அதிக விடமாம்!
  வித்தியா அதிபர்தமைக் கண்ட போது அதிலோப
     வீணர்க்கு எலாம் விடம் அதாம்!
ஈனம் மிகு புன்கவி வலோர்க்கு அதிக சபை காணில்
     ஏலாத கொடிய விடமாம்!
  ஏற்றம் இல்லாத படுபாவிகட்கு அறம் என்னில்
     எந்நாளும் அதிக விடமாம்!
ஆன தவயோகியர்கள் இதய தாமரை உறையும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

45. தாழ்வும் உயர்வுபெறும்

வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
     மேன்மையோர் செய்யின் அழகாம்!
  விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
     விழை மங்கை செய்யின் அழகாம்!
தகுதாழ்வு வாழ்வு வெகு தருமங்களைச் செய்து
     சாரிலோ பேரழகு அதாம்!
  சரீரத்தில் ஓர் ஊனம் மானம் எதுவாகிலும்
     சமர் செய்து வரில் அழகு அதாம்?
நகம் மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
     நாளும் அது ஓர் அழகு அதாம்!
  நாய் மீதில் ஏறினும் வீழினும் கண்ட பேர்
     நகை செய்து அழகன் என்பர் காண்!
அகம் ஆயும் நற்றவர்க்கு அருள் புரியும் ஐயனே!
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

46. நல்வினை செய்தோர்

சாண் எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,
     தானம் இளையாது உதவினோன்,
  தந்தை சொல் மறாதவன், முன்னவன் கானவன்
     தாழ்பழி துடைத்த நெடியோன்,
வருபிதிர்க்கு உதவினோன், தெய்வமே துணை என்று
     மைந்தன் மனைவியை வதைத்தோர்,
  மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டு
     மாய்த்து உலகில் மகிமை பெற்றோர்
கருதரிய சிபி அரிச்சந்திரன், மாபலி,
     கணிச்சியோன் சுமித்திரை சுதன்,
  கருடன், பகீரதனுடன் சிறுத்தொண்டனொடு
     கானவன், பிரகலாதன்,
அரிய வல்விபீடணன் எனும் மகா புருடராம்
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!
 

உரை
   

47. தீவினை செய்தோர்

வாய் இகழ்வு பேசி மிகு வாழ்வு இழந்தோன், சிவனை
     வைது தன் தலை போயினோன்,
  மற்றொருவர் தாரத்தில் இச்சை வைத்து உடலெலாம்
     மாறாத வடுவு ஆயினோன்,
தாயத்தினோர்க்கு உள்ள பங்கைக் கொடாமலே
     சம்பத்து இகழ்ந்து மாய்ந்தோன்,
  தக்க பெரியோர் தமை வணங்காது மதத்தினால்
     தந்தி வடிவாய் அலைந்தோன்,
மாயனைச் சபை அதனில் நிந்தை செய்து ஒளிகொள் நவ
     மணிமுடி துணிந்து மாய்ந்தோன்,
  வரு நகுடனொடு தக்கன் குருடன்
     மகன், வழுதி, சிசுபாலனாம்!
ஆயும் அறிவாளரொடு தேவர் பணி தாளனே!
     அவனி புகழ் அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

48. நன்நகர்

வாவி பல கூபமுடன் ஆறு அருகு சேர்வதாய்,
     மலை காத வழியில் உளதாய்
  வாழை கமுகொடு தெங்கு பயிராவதாய்ச், செந்நெல்
     வயல்கள் வாய்க்கால்கள் உளதாய்,
காவி கமலம் குவளை சேர் ஏரி உள்ளதாய்க்,
     கனவர்த் தகர்கள் மறைவலோர்
  காணரிய பல குடிகள் நிறைவு உள்ளதாய், நல்ல
     காவலன் இருக்கை உளதாய்த்,
தேவர் ஆலயம் ஆடல் பாடல் அணி மாளிகை
     சிறக்க உளதாய்ச் சற்சனர்
  சேரும் இடம் ஆகுமோர் ஊர் கிடைத்ததில் அதிக
     சீவனமுமே கிடைத்தால்
ஆவலொடு இருந்திடுவதே சொர்க்க வாசமென்று
     அறையலாம்! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

49. தீநகர்

ஈன சாதிகள் குடி இருப்பதாய், முள்வேலி
     இல்இல்லினுக்கு உளதாய்,
  இணைமுலை திறந்து தம் தலை விரித்திடு மாதர்
     எங்கும் நடமாட்டம் உளதாய்க்,
கானமொடு பக்கமாய் மலை ஓரமாய் முறைக்
     காய்ச்சல் தப்பாத இடமாய்,
  கள்ளர் பயமாய், நெடிய கயிறு இட்டு இறைக்கின்ற
     கற்கேணி நீர் உண்பதாய்.
மானம் இல்லாக் கொடிய துர்ச்சனர் தமக்கு ஏற்ற
     மணியம் ஒன்றுண்டன் ஆனதாய்,
  மாநிலத்து ஓர் தலம் இருந்து அதனில் வெகுவாழ்வு
     வாழ்வதிலும், அருகரகிலே
ஆன நெடு நாள்கிடந்து அமிழ்தலே சுகமாகும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

50. முழுக்குநாள்

வரும் ஆதி வாரம் தலைக்கு எண்ணெய் ஆகாது
     வடிவ மிகும் அழகு போகும்;
  வளர் திங்ளுக்கு அதிக பொருள் சேரும்; அங்கார
     வாரம் தனக்கு இடர் வரும்
திரு மேவு புதனுக்கு மிகு புத்தி வந்திடும்;
     செம்பொனுக்கு உயர் அறிவுபோம்;
  தேடிய பொருள் சேதம் ஆம் வெள்ளி; சனி எண்ணெய்
     செல்வம் உண்டு ஆயுள் உண்டாம்;
பரிகாரம் உளது ஆதி வாரம் தனக்கு அலரி;
     பௌமனுக்கான செழுமண்
  பச்சறுகு பொன்னவற்கு ஆம்; எருத்தூள் ஒளிப்
     பார்க்கவற்கு ஆகும் எனவே;
அரிதுஆ அறிந்த பேர் எண்ணெய் சேர்த்தே முழுக்கு
     ஆடுவார்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை