51. மருத்துவன்

தாதுப் பரீட்சை வரு கால தேசத்தோடு
     சரீர லட்சணம் அறிந்து,
  தன்வந்த்ரி கும்ப முனி தேரர் கொங்கணர் சித்தர்
     தமது வாகடம் அறிந்து
பேதம்பெருங் குளிகை சுத்திவகை மாத்திரைப்
     பிரயோகமோடு பஸ்மம்
  பிழையாது மண்டூர செந்தூர லட்சணம்
     பேர் பெறுங் குணவாகடம்
சோதித்து, மூலிகாவித நிகண்டுங் கண்டு
     தூய தைலம் லேகியம்
  சொல் பக்குவம் கண்டு வரு ரோக நிண்ணயம்
     தோற்றியே அமிர்தகரனாய்,
ஆதிப் பெருங்கேள்வி உடையன் ஆயுர்வேதன்
     ஆகும்; எமது அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

52. உண்மை உணர் குறி

சோதிடம் பொய்யாது மெய் என்பது அறிவரிய
     சூழ்கிரகணம் சாட்சி ஆம்!
  சொற் பெரிய வாகடம் நிசம் என்கை பேதி தரு
     தூய மாத்திரை சாட்சி ஆம்!
ஆதியில் செய்த தவம் உண்டு இல்லை என்பதற்கு
     ஆளடிமையே சாட்சி ஆம்!
  அரி தேவதேவன் என்பதை அறிய முதல்நூல்
     அரிச்சுவடியே சாட்சி ஆம்!
நாதனே மாதேவன் என்பதற்கோ ருத்ர
     நமகசமகம் சாட்சி ஆம்!
  நாயேனை ரட்சிப்பது உன்பாரம்! அரிஅயன்
     நாளும் அர்ச்சனை செய் சரணத்து
ஆதி நாயக மிக்க வேத நாயகனான
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

53. பிறவிக்குணம் மாறாது

கலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,
     கல்வியும், கருணை விளைவும்,
  கருது அரிய வடிவமும் போகமும், தியாகமும்,
     கனரூபம் உள மங்கையும்,
அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,
     ஆண்மையும், அமுத மொழியும்,
  ஆன இச்செயல் எலாம் சனன வாசனையினால்
     ஆகிவரும் அன்றி, நிலமேல்
நலம் சேரும் ஒருவரைப் பார்த்தது பெறக்கருதின்
     நண்ணுமோ? ரஸ்தாளிதன்
  நற்சுவை தனக்குவர வேம்புதவமே நெடிது
     நாள்செயினும் வாராது காண்!
அலங்காரம் ஆக மலர்கொன்றை மாலிகை சூடும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே.

உரை
   

54. ஊழ்வலி

கடல் அளவு உரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்
     காணும் படிக்கு உரை செய்வர்,
  காசினியின் அளவு பிரமாணம் அது சொல்லுவார்
     காயத்தின் நிலைமை அறிவார்,
விடல் அரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்
     விடாமல் தடுத்து அடக்கி
  மேன்மேலும் யோக சாதனை விளைப்பார், எட்டி
     விண் மீதினும் தாவுவார்,
தொடல் அரிய பிரம நிலை காட்டுவார், எண் வகைத்
     தொகையான சித்தி அறிவார்,
  சூழ்வினை வரும் பொழுது சிக்கி உழல்வார்! அது
     துடைக்க ஒரு நான்முகற்கும்
அடைவு அல எனத் தெரிந்து அளவு இல் பல நூல் சொல்லும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

55. உயர்வு இல்லாதவை

வேதியர்க்கு அதிகமாம் சாதியும், கனக மக
     மேருவுக்கு அதிக மலையும்,
  வெண்திரை கொழித்து வரு கங்கா நதிக்கு அதிக
     மேதினியில் ஓடு நதியும்
சோதி தரும் ஆதவற்கு அதிகமாம் காந்தியும்,
     சூழ்கனற்கு அதிக சுசியும்
  தூய தாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,
     சுருதிக்கு உயர்ந்த கலையும்,
ஆதி வடமொழி தனக்கு அதிகமாம் மொழியும், நுகர்
     அன்னதானம் தனிலும் ஓர்
  அதிக தானமும் இல்லை என்று பல நூல் எலாம்
     ஆராய்ந்த பேருரை செய்வார்!
ஆதவன் பிரமன் விண்ணவர் முனிவர் பரவ வரும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே.

உரை
   

56. வீணர்

வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீண் உரை
     விரும்புவோர் அவரின் வீணர்!
  விருந்து கண்டு இ்ல்லாள் தனக்கு அஞ்சி ஓடி மறை
     விரகு இலோர் அவரின் வீணர்!
நாட்டம் தரும் கல்வி இல்லோரும் வீணரே!
     நாடி அவர் மேல் கவி சொல்வார்
  நானிலம் தனில் வீணர்! அவரினும் வீணரே
     நரரைச் சுமக்கும் எளியோர்!
தேட்ட அறிவிலாத பெரு வீணரே அவரினும்
     சேர் ஒரு வரத்தும் இன்றிச்
  செலவு செய்வோர் அதிக வீணராம்! வீணனாய்த்
     திரியும் எளியேனை ஆட்கொண்டு
ஆட்டம் செய்யும் பத அம்புயம் முடியின் மேல் வைத்த
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

57. கெடுவன

மூப்பு ஒருவர் இல்லாத குமரி குடி வாழ்க்கையும்,
     மூது அரண் இலாத நகரும்,
  மொழியும் வெகு நாயகர் சேரிடமும், வரும் எதுகை
     மோனை இில்லாத கவியும்
காப்பு அமைவு இலாததோர் நந்தவனமும்,நல்ல
     கரை இலா நிறையே அரியும்,
  கசடறக் கற்காத வித்தையும், உபதேச
     காரணன் இலாத தெளிவும்,
கோப்பு உள விநோதம் உடையோர் அருகு புகழாத
     கோதையர் செய் கூத்தாட்டமும்,
  குளிர் புனல் நிறைந்து வரும் ஆற்றோரம் அதினின்று
     கோடு அயர்ந்து ஓங்கு தருவும்,
ஆப்பது இல்லாத தேர் இவை எலாம் ஒன்றாகும்
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

58. இவையே போதும்

பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்து உளோர்
     பூவலம் செய வேண்டுமோ?
  பொல்லாத கொலை களவு இலாத நன்னெறி உளோர்
     புகழ்அறம் செய வேண்டுமோ?
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்
     நல்லறம் செய வேண்டுமோ?
  நல் மனோசுத்தி உண்டான பேர் மேலும் ஒரு
     நதி படிந்திட வேண்டுமோ?
மெய்யா நின் அடியரைப் பரவுவோர் உன்பதம்
     விரும்பி வழிபட வேண்டுமோ?
  வேதியர் தமைப் பூசை பண்ணுவோர் வானவரை
     வேண்டி அர்ச்சனை செய்வரோ?
ஐயாறுடன் கமலை சோணாசலம் தில்லை
     அதிபனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

59. அரியர்

பதின்மரில் ஒருத்தர் சபை மெச்சிடப் பேசுவோர்!
     பாடுவோர் நூற்றில் ஒருவர்!
  பார் மீதில் ஆயிரத்து ஒருவர் விதி தப்பாது
     பாடி ப்ரசங்கம் இடுவோர்!
இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர்!
     இதை அறிந்து இதயம் மகிழ்வாய்
  ஈகின்ற பேர் புவியிலே அருமையாகவே
     இலக்கத்திலே ஒருவராம்!
துதி பெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த்
     தூயர் கோடியில் ஒருவர் ஆம்.
  தொல் உலகு புகழ்காசி ஏகாம்பரம் கைலை
     சூழும் அவிநாசி பேரூர்
அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

60. கற்பு மேம்பாடு

தன் கணவன் உருவமாய்த் தற்புணர வந்தோன்
     தனக்கு இணங்காத நிறையாள்,
  தழல் கதிர் எழாமலும் பொழுது விடியாமலும்
     சாபம் கொடுத்த செயலாள்,
மன்னி வளர் அழல் மூழ்கி உலகு அறிய வேதனது
     மகிழ்நனைச் சேர்ந்த பரிவாள்,
  மைந்தனைச் சுட வந்த இறைவன் தடிந்த வடி
     வாள் மாலையான கனிவாள்,
நல் நதி படிந்திடுவது என்னஆர் அழல் மூழ்கி
     நாயகனை மேவு தயவாள்,
  நானிலம் புகழ்சாலி, பேர் பெறு நளாயினி,
     நளின மலர் மேல் வைதேகி
அன்னம் என வரு சந்த்ரமதி துரோபதை என்பர்
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை