61. கோடி உடுக்கும் நாள்

கறைபடாது ஒளி சேரும் ஆதிவாரம் தனில்
     கட்டலாம் புதிய சீலை;
  கலை மதிக்கு ஆகாது; பலகாலும் மழையினில்
     கடிது நனைவுற்று ஒழிதரும்;
குறைபடாது இடர் வரும்; வீரியம் போம், அரிய
     குருதி வாரம் தனக்கு;
  கொஞ்ச நாளில் கிழியும், வெற்றி போம் புந்தியில்;
     குருவாரம் அதில் அணிந்தால்,
மறைபடாது அழகு உண்டு, மேன்மேலும் நல் ஆடை
     வரும்; இனிய சுக்கிரற்கோ
  வாழ்வு உண்டு, திருவு உண்டு, பொல்லாத சனியற்கு
     வாழ்வு போம், மரணம் உண்டாம்;
அறைகின்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

62. சகுனம் - 1

சொல் அரிய கருடன் வானரம் அரவம் மூஞ்சிறு
     சூகரம் கீரி கலைமான்
  துய்ய பாரத்வாசம் அட்டை எலி புன்கூகை
     சொல் பெருக மருவும் ஆந்தை
வெல் அரிய கரடி காட்டான் பூனை புலிமேல்
     விளங்கும் இருநா உடும்பு
  மிக உரை செய் இவை எலாம் வலம் இருந்து இடம் ஆகில்
     வெற்றி உண்டு அதிக நலம் ஆம்;
ஒல்லையின் வழிப் பயணம் ஆகும் அவர் தலைதாக்கல்,
     ஒரு துடை இருத்தல், பற்றல்,
  ஒரு தும்மல், ஆணை இடல், இருமல், போகேல் என்ன
     உபசுருதி சொல் இவை எலாம்
அல்லல் தரும் நல்ல அல என்பர்; முதியோர் பரவும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

63. சகுனம் - 2

நரி மயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை
     நாவி சிச்சிலி ஓந்தி தான்
  நரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி
     நாடரிய சுரபி மறையோர்
வரி உழுவை முயல் இவை அனைத்தும் வலம் ஆயிடின்
     வழிப்பயணம் ஆகை நன்றாம்;
  மற்றும் இவை அன்றியே குதிரை அனுமானித்தல்,
     வாய்ச்சொல் வாவா என்றிடல்,
தருவளை தொனித்திடுதல், கொம்பு கிடு முடி அரசு
     தப்பட்டை ஒலி வல்வேட்டு
  தனிமணி முழக்கு எழுதல் இவை எலாம் ஊர்வழி
     தனக்கு ஏக நன்மை என்பர்!
அருணகிரண உதயம் தருண பானுவை அனைய
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

64. சகுனம் - 3

தலைவிரித்து எதிர் வருதல், ஒற்றைப் பிராமணன்,
     தவசி, சந்நாசி, தட்டான்,
  தனம் இலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,
     தட்டை முடி, மொட்டைத் தலை,
கலன் கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,
     கதித்ததில தைலம், இவைகள்
  காண எதிர் வரஒணா; நீர்க்குடம், எருக்கூடை,
     கனி, புலால் உபய மறையோர்
நலம் மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை
     நாளும் வண்ணான் அழுக்கு
  நசை பெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர் இவைகள்
     நாடி எதிர் வர நன்மையாம்;
அலை கொண்ட கங்கை புனை வேணியாய்! பரசு அணியும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

65. உணவில் விலக்கு

கை விலைக்குக் கொளும் பால் அசப்பால், வரும்
     காராக் கறந்த வெண்பால்
  காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு
     காந்திக் கரிந்த சோறு,
செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,
     தென்னை வெல்லம் லாவகம்,
  சீர் இலா வெள் உள்ளி, ஈர் உள்ளி, இங்குவொடு
     சிறப்பு இல் வெண் கத்தரிக்காய்,
எவ்வம் இல் சிவன் கோயில் நிர்மாலியம் கிரணம்,
     இலகு சுடர் இல்லாத ஊண்,
  இவை எலாம் சீலம் உடையோர்களுக்கு ஆகா
     எனப் பழைய நூலுரை செயும்
ஐவகைப் புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

66. நற்பொருளில் குற்றம்

பேரான கங்கா நதிக்கும் அதன் மேல் வரும்
     பேனமே தோடம் ஆகும்!
  பெருகி வளர் வெண் மதிக்கு உள் உள் களங்கமே
     பெரிதான தோடம் ஆகும்!
சீராம் தபோதனர்க்கு ஒருவர் மேல் வருகின்ற
     சீற்றமே தோடம் ஆகும்!
  தீதில் முடி மன்னவர் விசாரித்திடாது ஒன்று
     செய்வது அவர் மேல் தோடம் ஆம்!
தாராளமா மிகத் தந்துளோர் தாராமை
     தான் இரப்போர் தோடம் ஆம்!
  சாரம் உள நல் கருப்பஞ் சாறு கைப்பது அவர்
     தாலம் செய் தோடம் ஆகும்!
ஆராயும் ஒரு நான்மறைக்கும் எட்டாது ஒளிரும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

67. மனை கோலுவதற்கு மாதம்

சித்திரைத் திங்கள் தனில் மனைகோல மனைபுகச்
     செல்வம் உண்டு அதினும் நலமே
  சேரும் வைகாசிக்கு; மேனாள் அரன் புரம்
     தீயிட்டது ஆனி ஆகா;
வெற்றி கொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம்
     வீறு அல்ல; ஆவணி சுகம்;
  மேவிடும் கன்னி இரணியன் மாண்டது ஆகாது;
     மேன்மை உண்டு ஐப்பசிக்கே;
உத்தமம் கார்த்திகைக்கு ஆகாது மார்கழியில்
     ஓங்கு பாரதம் வந்த நாள்;
  உயர் உண்டு மகரத்தில்; மாசி மாதத்தில் விடம்
     உம்பர் கோன் உண்டது ஆகாது;
அத்த நீ! மாரனை எரித்த பங்குனி தானும்
     ஆகுமோ! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

68. விருந்து வாரம்

செங்கதிர்க்கு உறவு போம், பகை வரும், விருந்து ஒருவர்
     செய்ய ஒணாது உண்ண ஒணாது;
  திங்களுக்கு உறவு உண்டு; நன்மையாம்; பகைவரும்
     செவ்வாய் விருந்து அருந்தார்;
பொங்கு புதன் நன்மை உண்டு உறவாம்; விருந்து உணப்
     பொன்னவற்கு அதிக பகை ஆம்;
  புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப்
     போன உறவும் திரும்பும்;
மங்குல் நிகர் சனி வாரம் நல்லதாம்; இதனினும்
     மனம் ஒத்து இருந்த இடமே
  வாலாயமாய்ப் போய் விருந்து உண விருந்து உதவ
     வாய்த்த நாள் என்று அறியலாம்;
அம்கையில் விளங்கி வளர்துங்கம் மழுவாளனே!
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

69. பூப்பு வாரம்

அருக்கனுக்கு அதி ரோகி ஆவள்;நற் சோமனுக்கு
     ஆன கற்புடையள் ஆவாள்;
  அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள்;புந்தி
     அளவில் பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
     சிறுவரைப் பெற்று எடுப்பாள்;
  சீர் உடைய பார்க்கவற்கு அதிபோகவதியும் ஆம்;
     திருவும் உண்டாய் இருப்பாள்;
கருத்து அழிந்து எழில் குன்றி வறுமை கொண்டு அலைகுவாள்
     காரி வாரத்தில் ஆகில்;
  களப முலை மடமாதர் புட்பவதியாம் வார
     கால பலன் என்று உரை செய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

70. பூப்பு இலக்கினம்

வறுமை தப்பாது வரும் மேடத்தில்; இடபத்தில்
     மாறாது விபசாரி ஆம்;
  வாழ்வு உண்டு போகம் உண்டாகும் மிதுனம்; கடகம்
     வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமை செயும் மிடி சேர்வள் மிருகேந்திரற்கு எனில்
     சீர்பெறுவள் கன்னி என்னில்;
  செட்டுடையள் துலை எனில்; பிணியால் மெலிந்திடுவள்
     தேளினுக்குத்; தனுசு எனில்
நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி உடையளாம்;
     நீள்மகரம் மானம் இலளாம்;
  நிறைபோகவதி கும்பம் எனில்; மீனம் என்னிலோ
     நெடிய பேரறிவு உடையளாம்;
அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்
     அது என்பர்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை