தொடக்கம் |
|
|
71.
தீவும் கடலும்
நாவலந் தீவினைச்
சூழ்தரும் கடல் அளவு
லட்சம் யோசனை; இதனையே
நாள்தொறும் சூழ்வது இலவந்தீவு; அதைச் சூழ்தல்
நல்கழைச் சாற்றின் கடல்;
மேவும் இது சூழ்வது குசத்தீவு அதைச் சூழ்தல்
மிகும் மதுக்கடல்; அதனையே
விழைவொடும் சூழ்தல் கிரவுஞ்சதீவம் இதனின்
மேற்சூழ்தல் நெய்க்கடலது ஆம்;
பூவில்இது சூழ்தல் சாகத்தீவம்; இங்கு இதைப்
போர்ப்பது திருப்பாற் கடல்;
போவதது சூழ்தல் சான்மலி தீவம் ஆம்; தயிர்ப்
புணரி அப்பாலும் அப்பால்
ஆவலுறு புட்கரத் தீவாம் இதைச் சூழ்வ
தரும்புனற் அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
72.
மாணிக்கங்கள்
சுழி சுத்தமாய்
இருந்து அதிலும் படைக்கான
துரகம் ஓர் மாணிக்கம் ஆம்;
சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உள
துரையும் ஓர் மாணிக்கம் ஆம்;
பழுது அற்ற அதி ரூபவதியுமாய்க் கற்புடைய
பாவையோர் மாணிக்கம் ஆம்;
பலகலைகள் கற்று அறி அடக்கம் உள பாவலன்
பார்க்கிலோர் மாணிக்கம் ஆம்;
ஒழிவு அற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்
உசிதனோர் மாணிக்கம் ஆம்;
உத்தம குலத்து உதித்து அதிலுமோ மெய்ஞ்ஞானம்
உடையனோர் மாணிக்கம் ஆம்;
அழிவற்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
73.
உண்டிஇலையும் முறையும்
வாழைஇலை புன்னை
புரசுடன் நல் குருக்கத்தி
மா பலாத் தெங்கு பன்னீர்
மாசில் அமுது உண்ணலாம்; உண்ணாதவோ அரசு
வனசம் செழும்பாடலம்
தாழைஇலை அத்தி ஆல் ஏரண்ட பத்திரம்
சகதேவம் முள்முருக்குச்
சாரும் இவை அன்றி, வெண்பால் எருக்கு இச்சில்இலை
தனினும் உண்டிட ஒணாதால்;
தாழ்வு இலாச் சிற்றுண்டி நீர் அடிக்கடி பருகல்
சாதங்கள் பல அருந்தல்
சற்று உண்டல் மெத்த ஊண் இத்தனையும் மெய்ப்பிணி
தனக்கு இடம் எனப் பருகிடார்;
ஆழி புடை சூழ் உலகில் வேளாளர் குலதிலகன்
ஆகும் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே.
|
|
|
உரை
|
|
|
|
|
74.
கவிஞர் வறுமை
எழுதப் படிக்க
வகை தெரியாத மூடனை
இணை இலாச் சேடன் என்றும்,
ஈவது இல்லாத கன லோபியைச் சபை அதனில்
இணை இலாக் கர்ணன் என்றும்,
அழகு அற்ற வெகு கோர ரூபத்தை உடையோனை
அதிவடி மாரன் என்றும்,
ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடி தனை
ஆண்மை மிகு விசயன் என்றும்,
முழுவதும் பொய் சொல்லி அலைகின்ற வஞ்சகனை
மொழி அரிச்சந்த்ரன் என்றும்,
மூது உலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்
முறையின்றி ஏற்பது என்னோ?
அழல் என உதித்து வரு விடம் உண்ட கண்டனே!
அமலனே! அருமை மதவேள்!
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
75. கவிஞன்
தெள் அமிர்த
தாரை என மதுரம் கதித்த பைந்
தேன்மடை திறந்தது எனவே
செப்பு முத்தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்
தெரிந்து உரை செய் திறமை உடனே
விள் அரிய காவியத்து உட்பொருள் அலங்காரம்
விரி இலக்கண வி கற்பம்
வேறும் உள தொன்னூல் வழக்கும் உலகத்து இயல்பும்
மிக்க ப்ரபந்த வண்மை
உள்ள எல்லாம் அறிந்து அலை அடங்கும் கடலை
ஒத்த அதிக சபை கண்ட போது
ஓங்கு அலை ஒலிக்கின்ற கடல் போல் ப்ரசங்கம்
அது உரைப்பவன் கவிஞன் ஆகும்!
அள்ளி விடம் உண்ட கனி வாயனே! நேயனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
76. நல்
சார்பு
காண் அரிய
பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே
கண் இணைகள் செய் புண்ணியம்;
கருணையாய் அவர் சொல்மொழி கேட்டிட லபிப்பது இரு
காது செய்திடு புண்ணியம்;
பேணி அவர் புகழையே துதி செய லபித்திடுதல்
பேசில் வாய் செய் புண்ணியம்;
பிழையாமல் அவர் தமைத் தொழுதிட லபிப்பது கை
பெரிது செய்திடு புண்ணியம்;
வீண் நெறி செலாமல் அவர் பணிவிடை லபிப்பது தன்
மேனி செய்திடு புண்ணியம்;
விழைவொடு அவர் சொற்படி நடந்திட லபிப்பதே
மிக்க பூருவ புண்ணியம்;
ஆணவம் எனும் களை களைந்து அறிவினைத் தந்த
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
77.
பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன்
சென்ம நட்சத்திரத்து
ஆதி வாரம் வரின்
தீரா அலைச்சல் உண்டாம்;
திங்களுக்கு ஆகில் வெகு சுக போசனத்தினொடு
திரு மாதின் அருளும் உண்டாம்,
வன்மை தரும் அங்கார வாரம் வந்தால் சிறிதும்
வாராது சுகமது என்பார்;
மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம் புந்தி எனும்
வாரத்துடன் கூடினால்;
நன்மை தரு குரு வாரம் அது சேர்ந்து வரில் ஆடை
நன்மையுடனே வந்திடும்;
நாரியருடன் போகம் மிகவும் உண்டு ஒரு வெள்ளி
நல்ல வாரத்தில் வந்தால்;
அல் மருவு பீடை உண்டாம் என்பர் சனியனுக்(கு);
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
78. ஏது?
பொன் ஆசை
உள்ளவர்க்கு உறவு ஏது? குரு ஏது?
பொங்கு பசி உள்ள பேர்க்குப்
போதவே சுசி ஏது? ருசி ஏது? மயல் கொண்டு
பொது மாதர் வலை விழியிலே
எந்நாளும் அலைபவர்க்கு அச்சமொடு வெட்கம் ஏது
என்றென்றும் உறு கல்வி மேல்
இச்சை உள பேர்க்கு அதிக சுகமேது? துயிலேது?
வெளிதாய் இருந்து கொண்டே
பன் நாளும் அலைபவர்க்கு இகழ் ஏது? புகழ் ஏது?
பாரில் ஒருவர்க்கு அதிகமே
பண்ணியிடு மூடருக்கு அறம் ஏது மறம் அலால்?
பகர் நிரயம் ஒன்றுளது காண்!
அல் நாண வருகரி உரித்தணியும் மெய்யனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
79.
மழைநாள் குறிப்பு
சித்திரைத்
திங்கள் பதின் மூன்றுக்கு மேல் நல்ல
சீரான பரணி மழையும்,
தீதில் வைகாசியில் பூரணை கழிந்த பின்
சேரும் நாலாம் நாளினில்
ஒத்து வரு மழையும், அவ் ஆனியில் தேய்பிறையில்
ஓங்கும் ஏகாதசியினில்
ஒளிர் பரிதி வீழ் பொழுதில் மந்தாரமும் மழையும்,
உண்டாயிருந்து ஆடியில்
பத்தி வரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்
பகரும் ஆவணி மூல நாள்
பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்
பாரில் வெகு விளைவும் உண்டாம்;
அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்
அண்ணல் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|
|
80.
பயன் இலாதவை
சமயத்தில்
உதவாத நிதியம் ஏன்? மிக்க துயர்
சார்பொழுது இலாத கிளை ஏன்?
சபை முகத்து உதவாத கல்வி ஏன்? எதிரி வரு
சமரத்து இலாத படை ஏன்?
விமலனுக்கு உதவாத பூசை ஏன்? நாளும் இருள்
வேளைக்கு இலாத சுடர் ஏன்?
வெம்பசிக்கு உதவாத அன்னம் ஏன்? நீடு குளிர்
வேளைக்கு இலாத கலை ஏன்?
தமது தளர் வேளைக்கு இலாத ஓர் மனைவி ஏன்?
சரசத்து இலாத நகை ஏன்?
சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?
தரணி மீது என்பர் கண்டாய்!
அமரர்க்கும் முனிவர்க்கும் ஒருவர்க்கும் எட்டாத
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|
|
|
உரை
|
|
|
|