11. இப்படிப்பட்டவர் இவர்

ஞாயநெறி தவறாமல் உலகபரி பாலனம்
     நடத்துபவனே அரசனாம்
  ராசயோசனை தெரிந்து உதியஆகியசெய்தி
     நவிலும் அவனே மந்திரி,
நேயமுடனேதன் சரீரத்தை எண்ணாத
     நிர்வாகியே சூரனாம்,
  நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்துசொலும்
     நிபுணகவியே கவிஞனாம்
ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும்
     அறியும்முதியோன் வைத்தியன்,
  அகம்இன்றி மெய்யுணர்ந்து ஐம்புல ஒழித்துவிட்ட
     அவனே மெய்ஞானிஎனலாம்
மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான
     வரபுத்ர வடிவேலவா
  மயிலேறி விளையாடு குகனே!புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை