23. பேய் எனப்படுவோர் இவர்

கடன்உதவுவோர் வந்து கேட்கும்வேளையில் முகம்
     கடுகடுக்கின்ற பேயும்
  கனம்மருவு பெரியதனம் வந்தவுடன் இறுமாந்து
     கண்விழிக்காத பேயும்
அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து
     அகப்பட்டு உழன்ற பேயும்
  ஆசைமனையாளுக்கு நேசமாய் உண்மைமொழி
     ஆனதை உரைத்த பேயும்
இடர்இலா நல்லோர்கள் பெரியோர்களைச் சற்றும்
     எண்ணாது உரைத்தபேயும்
  இனியபரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவன்கு
     இடுக்கண் செய்திட்டபேயும்
மடமனை இருக்கப் பரத்தையைப் புணர்பேயும்
     வசைபெற்ற பேய்கள் அன்றோ ?
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை