26.
இருந்தும் பயன் படாதவை
தருணத்தில் உதவிசெய்யாத
நட்பாளர்,பின்
தந்துஎன்ன தராமல்என்ன
தராதரம் அறிந்து முறைசெய்யாத மன்னரைச்
சார்ந்துஎன்ன நீங்கில்என்ன
பெருமையுடன் ஆண்மைஇல்லாத ஒரு பிள்ளையைப்
பெற்றுஎன்ன பெறாமல்என்ன
பிரியமாய் உள்அன்பு இலாதவர்கள் நேசம்
பிடித்துஎன்ன விடுக்கில்என்ன
தெருளாக மானம்இல்லாத ஒருசீவனம்
செய்துஎன்ன செயாமல் என்ன
தேகிஎன வருபவர்க்கு ஈயாத செல்வம்
சிறந்துஎன்ன முறிந்தும் என்ன
மருவுஇளமை தன்னில்இல்லாத கன்னிகைபின்பு
வந்துஎன்ன வராமல்என்ன
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|