30. நோய்க்கு
வழிகள்
கல்லினால் மயிரினால்
மீதூண் விரும்பலால்
கருதிய விசாரத்தினால்
கடுவழி நடக்கையால் மலசலம் அடக்கையால்
கனிபழங்கறி உண்ணலால்
நெல்லினால் உமியினால் உண்டபின் மூழ்கலால்
நித்திரைகள் இல்லாமையால்
நீர்பகையினால் பனிக்காற்றின்உடல் நோதலால்
நீடுசருகு இலைஊறலால்
மெல்லிநல்லார்கலவி அதிகம்உள் விரும்பலால்
வீழ்மலம் சிக்குகையினால்
மிகுசுமை எடுத்தலால், இளவெயில் காய்தலால்
மெய்வாட வேலைசெயலால்
வல்இரவிலே தயிர்கள் சாகாதி உண்ணலால்
வன்பிணிக்கு இடம்என்பர்காண்
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|