51. திரும்பமாட்டாதவை
ஆடுஅரவின் வாயினில்
அகப்பட்ட தவளையும்
ஆனைவாயில் கரும்பும்
அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில்
அகப்பட்டு மெலிகாக்கையும்
நாடுஅறியவே, தாரைவார்த்துக் கொடுத்ததும்
நமன் கைக்குள் ஆனஉயிரும்
நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும்
நாய்வேட்டை பட்டமுயலும்
தேடி உண்பார்கைக்குள் ஆனபல உடைமையும்
தீவாதை யானமனையும்
திரள்கொடுங்கோல் அரசர் கைக்குஏறு பொருளும்
திரும்பிவாரா என்பர்காண்
மாடமிசை அன்னக் கொடித்திரள்கொள் சோணாடு
வாழ வந்திடுமுதல்வனே!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|