54. அருமை அறிதல்

மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர்
     மட்டிக் குரங்குஅறியுமோ?
  மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அறிவர்
     மலடிதான் அறிவதுஉண்டோ?
கணவருடை அருமையைக் கற்பான மாதுஅறிவள்
     கணிகையானவள் அறிவளோ?
  கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம் என்பதைவரும்
     களவான நாய்அறியுமோ?
குணமான கிளிஅருமை தனைவளர்த்தவர் அறிவர்
     கொடிய பூனையும் அறியுமோ?
  குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்
     கொடுமூடர் தாம்அறிவரோ?
மணவாளன் நீஎன்று குறவள்ளி பின்தொடர
     வனமூடு தழுவும்அழகா!
  மயில்ஏறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை