55. தீச்சார்பால்
பயன்படாதவை
மடுவினில் கஞ்சமலர்
உண்டுஒருவர் அணுகாமல்
வன்முதலை அங்குஇருக்கும்
மலையினில் தேன்உண்டு சென்றுஒருவர் கிட்டாமல்
மருவிஅதில் வண்டுஇருக்கும்
நெடுமைதிகழ் தாழைமலர் உண்டுஒருவர் அணுகாமல்
நீங்காத முள்இருக்கும்
நீடுபல சந்தன விருட்சம்உண்டு அணுகாது
நீள்அரவு சூழ்ந்துஇருக்கும்
குடிமல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது
குரைநாய்கள் அங்குஇருக்கும்
கொடுக்கும் தியாகிஉண்டு இடையூறு பேசும்
கொடும்பாவி உண்டுகண்டாய்
வடுவையும் கடுவையும் பொருவும்இரு கண்ணிகுற
வள்ளிக்கு உகந்தகணவா
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|