65. பிறர்
மனைவி நயப்பார்க்கு உறுபயன்
தம்தாரம் அன்றியே
பரதாரமேல் நினைவு
தனைவைத்த காமுகர்க்குத்
தயைஇல்லை நிசம்இல்லை வெட்கம்இலை சமரினில்
தைரியம் சற்றும்இல்லை
அம்தாரம்இல்லைதொடர் முறைஇல்லை நிலைஇல்லை
அறிவுஇல்லை மரபும்இல்லை
அறம்இல்லை நிதிஇல்லை இரவினில் தனிவழிக்கு
அச்சமோ மனதில்இல்லை
நந்தாத சனம்இல்லை இனம் இல்லை எவருக்கும்
நட்புஇல்லை கனதைஇல்லை
நயம்இல்லை இளமைதனில் வலிமைஇலை முத்திபெறும்
ஞானம்இலை என்பர்கண்டாய்
மந்தார பரிமள சுகந்தாதி புனையும்மணி
மார்பனே அருளாளனே!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|