66. மானம் விடாமை

கனபாரம் ஏறின் பிளந்திடுவது அன்றியே
     கல்தூண் வளைந்திடாது;
  கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே
     கனசூரன் அமரில்முறியான்;
தினமும்ஓர் இடுக்கண்வந்து உற்றாலும் வேங்கைதோல்
     சீவன் அளவில்கொடாது;
  திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும்
     செப்பும்முறை தவறிடார்கள்;
வனம்ஏறு கவரிமான் உயிர்போகும் அளவும்தன்
     மயிரின் ஒன்றும்கொடாது;
  வாராத ஆபத்து வருகினும் கற்புடைய
     மாதுநிறை தவறிநடவாள்;
மனதார உனதுஅடைக்கலம் என்ற கீரன்கு
     வன்சிறை தவிர்த்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை