71. யாக்கை நிலையாமை

மனு நல் மாந்தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்
     மண்மேல் இருந்துவாழ்ந்து
  மடியாதுஇருந்தபேர் இல்லைஅவர் தேடியதை
     வாரிவைத்தவரும் இல்லை;
பனிஅதனை நம்பியே ஏர்பூட்டு கதைஎனப்
     பாழான உடலைநம்பிப்
  பார்மீதில் இன்னும்வெகு நாள்இருப் போம்என்று
     பல்கோடி நினைவைஎண்ணி
அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்
     அன்பாக நின்,பதத்தை
  அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும்என்று எண்ணார்கள்
     ஆசைவலையில் சுழலுவார்
வனிதையர்கள் காமவி காரமே பகையாகும்
     மற்றும்ஒரு பகையும்உண்டோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை