74. பிறந்தார்
பெறும் பேறு
சடம்ஒன்று எடுத்தால்
புவிக்குநல்லவன் என்று
தன்பேர் விளங்கவேண்டும்;
சதிருடன் இதுஅல்லாது மெய்ஞ்ஞானி என்றுஅவ
தரிக்கவே வேண்டும்அல்லால்
திடம்இனிய ரணசூர வீரன்இவன் என்னவே
திசைமெச்ச வேண்டும்அல்லால்
தேகிஎன வருபவர்க்கு இல்லை என்னாமலே
செய்யவே வேண்டும்அல்லால்
அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான்
ஆகவே வேண்டும்,அல்லால்
அறிவினால் துரைமக்கள் ஆகவர வேண்டும்,இவர்
அதிக பூபாலர்ஐயா
வடகுவடு கிடுகிடுஎன எழுகடலும் அலைஎறிய
மணிஉரகன் முடிகள்நெரிய
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|