75. வேசை நிந்தை

தேடித்தம் வீட்டில் பணக்காரர் வந்திடின்
     தேகசீவன் போலவே
  சிநேகித்த உம்மை, ஒரு பொழுதுகாணாவிடின்
     செல்உறாது அன்னம்என்றே
கூடிச் சுகிப்பர்என்ஆசை உன் மேல்என்று
     கூசாமல் ஆணைஇடுவார்
  கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்துஇதழ்
     கொடுப்பர் சும்பனம்உகப்பர்
வேடிக்கை பேசியே சைம்முதல் பறித்தபின்
     வேறுபட நிந்தைசெய்து
  விடவிடப் பேசுவர் தாய்கலகம் மூட்டியே
     விட்டுத் துரத்திவிடுவார்
வாடிக்கையாய் இந்த வண்டப் பரத்தையர்
     மயக்கத்தை நம்பலாமோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை